

கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியே வருவோரால் கரோனா பரவுவதால் அவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி நடவடிக்கையோடு, இனி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவர் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரித்துள்ளார்.
புதுச்சேரியில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றுடையோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் அவர்கள் வசித்த பகுதிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி நகரப்பகுதிகள், கிராமப்பகுதிகளில் உள்ளாட்சித்துறை தொடர்பாக இன்று (ஜூலை 5) ஆய்வு செய்த ஆளுநர் கிரண்பேடி, தொற்றுநோய் வழக்கு தொடர்பான விவரங்கள் குறைவாகவே உள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நகராட்சி, பஞ்சாயத்துகளில் இன்னும் நன்றாக செயல்படுவது அவசியம் என்று உள்ளாட்சித்துறை இயக்குநர் மலர்க்கண்ணனுக்கு உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, வாட்ஸ் அப் வீடியோவில் கிரண்பேடி தெரிவித்துள்ள தகவல்:
"புதுச்சேரியில் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்கள் எவ்வாறு உள்ளனர் என்று அரசு அதிகாரிகள் தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டு ஆராய்ந்தனர். அதில், அப்பகுதிகளில் வசிக்கும் மக்களில் சிலர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வருகின்றனர். அவர்களால் மற்ற பகுதிகளுக்கும் கரோனா தொற்றுப் பரவுகிறது என்பது தெரியவந்தது.
கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து அரசு உத்தரவை மீறி வெளியே வருபவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் உடனடியாக, அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்படுவர்".
இவ்வாறு கிரண்பேடி எச்சரித்துள்ளார்.