

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் கல்லூரியை ஒட்டி அமைந்துள்ள ஏடிஎம் மையத்தினுள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கொள்ளை முயற்சியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.6 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் கருகி சாம்பலானதாக காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராசிபுரம் புதுச்சத்திரம் அருகே தனியார் கல்லூரியின் முன்புறம் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஏடிஎம் உள்ளது. இன்று (ஜூலை 5) அதிகாலை 2.30 மணியளவில் ஏடிஎம் மையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த ராசிபுரம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
அப்போது, ஏடிஎம் மையத்தில் இருந்த இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்த புதுச்சத்திரம் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், வங்கி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். ஏடிஎம் மைய சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவைப் பார்க்க முற்பட்டனர்.
சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, கல்லூரி சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்த்தபோது சம்பவம் நடந்த நேரத்தில் 4 பேர் ஏடிஎம் மையத்திற்கு வந்துள்ளனர். இதில் ஒருவர் ஏடிஎம் முன்புறம் நின்றுள்ளார். மற்ற மூவர் ஏடிஎம் மையத்திற்குள் இருந்துள்ளனர். அவர்கள் பணத்தைத் திருடும் நோக்கில் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் வைத்து திறக்க முற்பட்டபோது தீ விபத்து நேரிட்டிருக்கலாம், எனக் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மேலும், ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீயில், அதில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் கருகி சாம்பலானது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக, புதுச்சத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் நடந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.