Last Updated : 05 Jul, 2020 03:29 PM

 

Published : 05 Jul 2020 03:29 PM
Last Updated : 05 Jul 2020 03:29 PM

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதைத் தவிர்த்திட தினசரி கொள்முதல் அளவைக் கூட்டிடுக: பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

திருவாரூர்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நாளொன்றுக்கு ஆயிரம் சிப்பங்கள் மட்டுமே தற்போது கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதை 2,000 சிப்பமாக அதிகரிக்க வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

"காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் முன் பட்ட குறுவை சாகுபடி கிணற்றுப் பாசனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு, ஜூன் மாதம் தொடங்கி அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அறுவடையான நெல்லானது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், முழுமையாக உரிய காலத்தில் கொள்முதல் செய்யப்படாததால் ஒவ்வொரு கொள்முதல் நிலைய வாசலிலும் சுமார் 5,000 முதல் 10,000 வரையிலான மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன. தென்மேற்குப் பருவ மழை தொடங்கி பெய்து வருவதால் அதன் தாக்கத்தால் காவிரி டெல்டாவிலும் இரவு நேரங்களில் ஆங்காங்கு கோடை மழை பெய்கிறது. இதனால் கொள்முதல் நிலைய வாசல்களில் குவிக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் நனைந்து வீணாகின்றன.

கரோனா, மின் தட்டுப்பாடு போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கிடையே சிரமப்பட்டு சாகுபடி செய்து அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள் தங்கள் கண்முன்னே கொள்முதல் நிலைய வாயில்களில் நனைவதைப் பார்த்து விவசாயிகள் மனமுடைந்து செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளனர். இப் பாதிப்புகளுக்கு தமிழக அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும். எவ்வித நிபந்தனையுமின்றி அனைத்து நெல்லையும் உடனடியாக கொள்முதல் செய்திட முன்வர வேண்டும்.

தற்போது நாள் ஒன்றுக்கு காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை 1,000 சிப்பங்கள் மட்டுமே கொள்முதல் செய்ய இணையதளம் மூலம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கிராமப்புறங்களில் மின்சாரத் தட்டுப்பாடு, போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகளால் 500 முதல் 600 சிப்பங்கள் மட்டுமே பெரும்பான்மையான இடங்களில் கொள்முதல் செய்யும் நிலை உள்ளது.

தற்போது இயந்திரம் மூலம் அறுவடை நடைபெறுவதால் ஓரிரு வாரங்களில் நடைபெற வேண்டிய அறுவடைப் பணிகள் ஒரிரு நாட்களில் முடிவடைந்து விடுகிறது. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு நாள் ஒன்றுக்கு 2,000 சிப்பங்கள் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்ய வேண்டும். கால நிர்ணயமின்றி இணையதளச் செயல்பாடுகள் மூலம் இதை உறுதிப்படுத்த வேண்டும்.

அப்போதுதான் பெரும் சிக்கலிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க முடியும். மேலும், கொள்முதல் நிலையங்களில் ஊழல் முறைகேடுகளைக் களைய விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கொண்ட கண்காணிப்புக் குழுக்களையும் ஏற்படுத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x