ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய கண்டெய்னர் லாரி வீட்டின் சுவர் மீது மோதி விபத்து: ஓட்டுநர் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம்

விபத்துக்குள்ளான கண்டெய்னர் லாரி.
விபத்துக்குள்ளான கண்டெய்னர் லாரி.
Updated on
1 min read

ஆம்பூர் அருகே சாலையோரம் இருந்த வீட்டின் சுவர் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தார் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது:

''கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் இருந்து சென்னைக்கு கண்டெய்னர் லாரி தேசிய நெடுஞ்சாலை வழியாக இன்று (ஜூலை 5) காலை வேகமாக வந்துகொண்டிருந்தது. லாரியை வேலூர் அடுத்த பென்னாத்தூர் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் (60) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மாற்று ஓட்டுநரான வேலூரைச் சேர்ந்த வெங்கடேசன் (45) உடன் வந்தார்.

அதிகாலை 5.40 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னகொம்பேஸ்வரம், சின்னாளப்பட்டி வழியாக லாரி வந்தபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய கண்டெய்னர் லாரி சாலையோரம் இருந்த வீட்டின் சுவர் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில், லாரியின் முன்பக்கம் முழுமையாகச் சேதமடைந்தது. மாற்று ஓட்டுநரான வெங்கடேசன் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஓட்டுநர் துரைராஜ் படுகாயமடைந்தார். லாரி மோதிய வேகத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அந்த வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர் கோவிந்தசாமி (45), அவரது மனைவி சுகந்தி (40), அவர்களது 2 மகன்கள், ஒரு மகள் என 5 பேரும் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் கூச்சலிட்டதும், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையிலான தாலுகா போலீஸார் அங்கு விரைந்து வந்து மீட்புப் பணியைத் துரிதப்படுத்தினர். காயமடைந்த ஓட்டுநர் துரைராஜ், வீட்டின் உரிமையாளர் கோவிந்தசாமி, சுகந்தி உட்பட 5 பேர் மீட்கப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இதையடுத்து, பொக்லைன் வாகனம் கொண்டு லாரியை அப்புறப்படுத்திய காவல்துறையினர் இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநர் வெங்கடேசன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆம்பூர் தாலுகா போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்''.

இவ்வாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in