

விலையில்லா உணவுப் பொருள்களை அடுத்த ஆண்டு ஜூன் வரையிலும் வழங்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஜூலை 5) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா நோய் பெருந்தொற்று காரணமாக மார்ச் 24 முதல் மத்திய அரசால் நாடு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் தொற்று நோய்கள் சட்டம் ஆகியவற்றைத் தீவிரமாக அமலாக்கி வருகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்து போயுள்ளது.
வரலாறு காணாத வேலையின்மை அதிகரித்து வந்த நேரத்தில்,கரோனா நோய்த்தொற்று சேர்ந்துகொண்டதால் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்துப் பிரிவுகளின் இயக்கங்களும் தடைப்பட்டுள்ளன.
நாடு முடக்கம் மற்றும் ஊரடங்கு நடைமுறைகள் ஆகியவற்றில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் வாழ்க்கையில் இயல்பு நிலை திரும்பவில்லை. இந்த நிலையில், கரோனா நோய் தொற்று அதிவேகமாகப் பரவி வருவதால் நிலவரம் மோசமாகி வருகின்றது.
இந்த நெருக்கடியான காலத்தைச் சமாளிக்க குடும்ப அட்டை பெற்றிருப்போர் அனைவருக்கும் வருகிற நவம்பர் மாதம் வரை பொது விநியோகத்துறை மூலம் உணவுப் பொருள்கள் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் உணவுப் பொருள்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
ஆனால், தமிழ்நாடு முதல்வர் இந்த ஜூலை மாதம் மட்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச உணவுப் பொருள்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதில் குடும்ப அட்டை இல்லாதோர் குறித்தும், குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்துக் காத்திருப்போர் கவலைகள் குறித்தும் கருத்தில் கொள்ளவில்லை. முன்னர் 'மூன்று நாளில் கரோனா பிரச்சினைக்குத் தீர்வு' வரும் என அறிவித்தது போல், இந்த மாத இறுதியில் கரோனா நெருக்கடி முடிந்துவிடும் என நம்புகிறாரா?
மருத்துவ நிபுணர்கள் கருத்துப்படி கரோனா நோய் பெருந்தொற்று பல மாதங்கள் நீடிக்கும் எனத் தெரிகிறது. இந்த நிலவரத்தைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு விலையில்லா உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும் குடும்ப அட்டை இல்லாத குடும்பங்களுக்கு உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் பரிந்துரை அடிப்படையில் தற்காலிக குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும்".
இவ்வாறு இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.