Published : 05 Jul 2020 02:42 PM
Last Updated : 05 Jul 2020 02:42 PM

'காவல்துறை நண்பர்கள்' அமைப்பில் சாதி, மதவெறி சார்ந்தோர் ஊடுருவியுள்ளனர்: காவல்துறை நண்பர்கள் அமைப்பை உடனடியாக ரத்து செய்க- இரா.முத்தரசன்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்

சென்னை

காவல்துறையின் அத்துமீறல்களை தடுக்க காவல்துறை நண்பர்கள் அமைப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஜூலை 5) வெளியிட்ட அறிக்கை:

"சமூகத்தில் நிகழும் குற்றங்களை தடுப்பது, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களை கைது செய்து, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, சாட்சியம் மற்றும் ஆவணங்கள் மூலம் அவர்களது குற்றச் செயல்களை நிரூபித்து, தண்டனை கிடைக்கச் செய்வது, பொதுவான சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை பராமரித்து வருவது போன்ற மிக முக்கியமான கடைமைப் பொறுப்புகளை ஏற்றிருப்பது காவல்துறை நிர்வாகம்.

ஆனால் 'வேலியே பயிரை மேய்வது' காவல்துறையில் சிலர் அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவதை பல சம்பவங்கள் கவனப்படுத்தியுள்ளன. இதன் மீது அரசும், உள்துறை நிர்வாகமும், காவல்துறை நிர்வாகமும் காலத்தில் தலையிட்டு கறாரான வரைமுறைகள், ஒழுங்கு நெறிமுறைகளை உருவாக்க தவறியதன் மோசமான விளைவுகளை சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் இரட்டை படுகொலையாக வெளிப்படுத்தியுள்ளது.

இந்த கொடுங் குற்றச் செயலுக்கு காவல்துறையினர் 'காவல்துறை நண்பர்கள்' (Friends of Police) என்ற பெயரில் இருந்தவர்களை அடியாட்களாக பயன்படுத்தி இருப்பதும் தெரிய வருகிறது. இந்த 'காவல்துறை நண்பர்கள்' என்ற முறையை அறிமுகப்படுத்தும் காலத்திலேயே இது தவறுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டது. அதிகாரத்தில் இருந்தோர் கருத்தில் கொள்ளவில்லை.

எந்தவித விதிமுறைகளும் இல்லாமல் சேர்த்துக் கொள்ளப்பட்ட 'காவல்துறை நண்பர்கள்' அமைப்பில் சாதி, மதவெறி சார்ந்தோர், சமூக ஆதிக்கம் செலுத்தும் தீய எண்ணம் கொண்டோர், காவல்துறைக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களுக்கும் இடையில் தரகு வேலைகள் பார்க்கும் திறமை பெற்றோர் போன்றோர் ஊடுருவி இடம் பெற்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டது. இதனை அதிகார வர்க்கமும், ஆளும் தரப்பும் அலட்சியப்படுத்தி விட்டன.

இதன் காரணமாக 'காவல்துறை நண்பர்கள்' சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையிலும் 'காவல்துறை நண்பர்கள்' அமைப்பை இரண்டு மாதங்கள் மட்டுமே தடை செய்ய பரிசீலிப்பதாக செய்திகள் வருவதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

காவல்துறையின் அத்துமீறல்களை தடுக்க காவல்துறை நண்பர்கள் அமைப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இத்திட்டத்தில் செயல்பட்டோர் மீதுள்ள புகார்கள் மீது விரிவாக விசாரணை நடத்தி, குற்றம் செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது"

இவ்வாறு இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x