இ-பாஸ் மறுப்பு; சென்னை, கோவை விடுதிகளில் சான்றிதழ்களை எடுக்க முடியாமல் தவிக்கும் மாணவர்கள்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கல்லூரிகளில் தங்கிப் படித்த தென் மாவட்ட மாணவ, மாணவிகள் ஊரடங்கு அறிவித்ததும் சொந்த ஊருக்குத் திரும்பினர். இந்நிலையில் விடுதிகளில் விட்டு வந்த உடைமைகள், சான்றிதழ்களை எடுத்து வர அனுமதி கிடைக்காமல் தவிக்கின்றனர்.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க மார்ச் மாதம் கடைசி வாரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வெளியூர்களில் உள்ள விடுதிகளில் தங்கி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் படித்து வந்த மாணவ, மாணவிகள் சான்றிதழ்கள், லேப்டாப் மற்றும் உடைமைகளைத் தங்கியிருந்த விடுதி அறைகளிலேயே விட்டு விட்டு அவசரம் அவசரமாக சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.

ஊரடங்கு மூன்றரை மாதங்களுக்கும் மேலாக நீடிப்பதால் பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் சொந்த ஊர்களில் உள்ள மாணவ, மாணவிகள் தாங்கள் தங்கியிருந்த விடுதிகளுக்குச் சென்று உடைமைகளை எடுத்து வர நினைக்கின்றனர். ஆனால், அதற்கு அனுமதி கிடைக்காமல் மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர்.

திருமணம், மருத்துவ சிகிச்சை, இறப்பு ஆகியவற்றுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது. உடைமைகளை எடுத்துவிட்டு உடனே திரும்ப இ-பாஸ் கேட்டு மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த பெற்றோர் ஒருவர் கூறுகையில், "என் மகள் சென்னையில் ஒரு நிறுவனத்தில் கல்லூரிக் கடைசிப் பருவத்தேர்வுக்கான பயிற்சியை மேற்கொண்டு வந்தார். மணப்பாக்கத்தில் 4 மாணவிகள் சேர்ந்து ஒரு குடியிருப்பில் வீடு எடுத்துத் தங்கியிருந்தனர். மார்ச் முதல் வாரத்தில் விடுமுறையில் ஊர்களுக்குச் சென்றனர்.

பின்னர் ஊரடங்கால் பொதுப் போக்குவரத்து முடங்கியதால் இன்னும் குடியிருப்பில் உள்ள பொருட்களை எடுக்க சென்னை செல்ல முடியவில்லை. குடியிருப்பில் லேப்டாப், கல்லூரி வரையிலான படிப்புச் சான்றுகள் போன்ற அனைத்தும் உள்ளன. தற்போது வேலைக்குத் தேர்வான நிறுவனத்துக்குச் சான்றிதழ்களைக் கொடுக்க வேண்டியதுள்ளது.

இதேபோல், கோவை, ஈரோடு, சென்னை போன்ற இடங்களில் கல்லூரிகளில் படித்தவர்கள் விடுதியைக் காலி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். விடுதி அறைகளில் உடைமைகள் நாசமாகி வருகின்றன. இதனால் விடுதிகள், குடியிருப்புகளில் உள்ள சான்றிதழ்களை எடுத்து வர மாணவ, மாணவிகள் அல்லது பெற்றோர்கள் சென்று திரும்பும் காரணத்துக்கு இ-பாஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in