

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்ற தமிழர்களை, உடனடியாகத் தமிழகம் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை அண்ணா நகரில் உள்ள தன் இல்லம் முன்பு வைகோ இன்று (ஜூலை 5) கட்சியினர் சிலருடன் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அதன் பிறகு, வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"கரோனா தாக்குதலால், வளைகுடா நாடுகளில் உள்ள தமிழகத் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழந்து விட்டார்கள். அன்றாட உணவுக்கு வழி இன்றித் தவிக்கின்றார்கள். கரோனாவால் பாதிக்கப்பட்டாலும் மருத்துவமனைகளில் இடம் கிடைப்பது இல்லை. ஏற்கெனவே வசிக்கின்ற அறைகளில் பலருடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களது நிலையை எண்ணி, தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளன.
தங்கள் சொந்தச் செலவில் ஏற்பாடு செய்து, புறப்பட்டு வர இருந்த விமானங்களையும், கடைசி நேரத்தில் மத்திய அரசு நிறுத்திவிட்டது.
கேரள அரசு, தங்கள் மாநிலத்தவரை மீட்டு வருகின்ற பணிகளை வெற்றிகரமாகச் செய்து வருகின்றது. அதேபோல், பல மாநில அரசுகளும் இயங்கி வருகின்றன. ஆனால், தமிழக அரசு விமானங்கள் வந்து இறங்குவதற்கு ஒப்புதல் தரவில்லை. 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், தமிழகத்திற்குப் போதுமான விமானங்களை மத்திய அரசு அறிவிக்கவில்லை. எனவே, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றோம்.
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்களைப் பேணுவதற்காக, தமிழக அரசு ஒரு புதிய துறையை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்".
இவ்வாறு வைகோ தெரிவித்தார்.