Published : 05 Jul 2020 07:45 AM
Last Updated : 05 Jul 2020 07:45 AM

புதுச்சேரி அருகே ரவுடியின் இறுதி ஊர்வலத்தில் ஊரடங்கை மீறி 100 வாகனங்கள் அணிவகுப்பு: 500 பேர் பங்கேற்றும் கண்டுகொள்ளாத போலீஸார்

புதுச்சேரி அடுத்த வில்லியனூர் பிள்ளையார்குப்பம் புதுநகர் அங்காளம்மன் கோயில் அருகே கடந்த 2-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த ரவுடி முரளி(19), கொடாத்தூரைச் சேர்ந்த சந்துரு(23) ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

சில மாதங்களுக்கு முன் நடந்த மோட்டார் சைக்கிள் எரிப்பு முன்விரோதத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி அருண், அவரது ஆதரவாளர்கள் இந்தக் கொலைகளைச் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த அருண், பிரேம்நாத், சிலம்பு செல்வன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 7 பேரை தேடி வருகின்றனர்.

சம்பவத்தன்று ரவுடி அருணை கொலை செய்ய எதிர்தரப்பினர் நாட்டு வெடிகுண்டு வீசியது தொடர்பாக கொலை செய்யப்பட்ட முரளி, சந்துரு மற்றும் முரளியின் அண்ணன் முகிலன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, முகிலனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனி டையே கொலை செய்யப்பட்ட முரளி மற்றும் சந்துருவின் உடல்கள் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, முரளியின் சொந்த ஊரான வழுதாவூரில் நேற்று முன்தினம் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இதில் முரளியின் நண்பர்கள், ஆதரவாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கா மலும் 100 மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்து வந்து பங்கேற்றனர். இந்தக் காட்சி புதுச்சேரி மற்றும் அதை யொட்டி யுள்ள தமிழகப் பகுதிகளில் வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால் இறப்பு நிகழ்வில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு இந்த இறுதி ஊர்வலத்தில் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. இதைத் தடுக்க வேண்டிய கண்டமங்கலம் போலீஸாரும் கண்டுகொள்ளவில்லை என்று அப்பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘144 தடை உத்தரவு மற்றும்ஊரடங்கு சட்டத்தை மீறி அரசு நிர்ணயித்த எண்ணிக்கையைத் தாண்டி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றதாக 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x