உயர் நீதிமன்றத்தில் நாளை முதல் நீதிபதிகள் அனைத்து வழக்குகளையும் காணொலி மூலம் விசாரிக்க வேண்டும்: தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவு

உயர் நீதிமன்றத்தில் நாளை முதல் நீதிபதிகள் அனைத்து வழக்குகளையும் காணொலி மூலம் விசாரிக்க வேண்டும்: தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவு
Updated on
1 min read

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும்உயர் நீதிமன்ற மதுரை கிளையில்நாளை (ஜூலை 6) முதல் அனைத்துநீதிபதிகளும், அனைத்து வழக்குகளையும் காணொலிக் காட்சி மூலமாக விசாரிக்க தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவிட்டுள்ளார்.

கரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24 முதல் தொடர்ச்சியாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால்மார்ச் முதல் சென்னை உயர் நீதிமன்றத்தின் அன்றாடப் பணிகளும் ஸ்தம்பித்துள்ளன. அவசர வழக்குகள் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் நீதிபதிகள் பணியமர்த்தப்பட்டு காணொலிக் காட்சி மூலமாக விசாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ஜூலை மாதத்தில் நீதிமன்ற பணிகளை மேற்கொள்வது தொடர்பான நிர்வாகக்குழுக் கூட்டம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சென்னை உயர் நீதிமன்றத்தில்உள்ள அனைத்து நீதிபதிகளும், அனைத்து வழக்குகளையும் நாளை (ஜூலை 6) முதல் காணொலிக் காட்சி மூலமாக விசாரிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை முதல் இரு நீதிபதிகள் அடங்கிய 6 அமர்வுகளும், 27 நீதிபதிகள் அடங்கிய தனி அமர்வுகளும் விசாரிக்க வேண்டிய வழக்குவிவரப் பட்டியலை உயர் நீதிமன்ற பதிவுத் துறை வெளியிட்டுள்ளது.

இதேபோல உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் அடங்கிய 2 அமர்வுகளும் 9 நீதிபதிகள் அடங்கிய தனி அமர்வுகளும் அனைத்து வழக்குகளையும் விசாரிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in