Published : 05 Jul 2020 07:22 AM
Last Updated : 05 Jul 2020 07:22 AM

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தொடரும் கரோனா பரவல்: பரிசோதனைகளை அதிகரிக்க திமுக கோரிக்கை

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதிகப்படியான பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்று திமுகஎம்பி, எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் தலைமையில் வேலூர் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த், வேலூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரத்தை நேற்று சந்தித்து திமுக சார்பில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஏ.பி.நந்தகுமார் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் கரோனாதொற்று அதிகரித்து வருகிறது. எனவே, மாவட்டத்தில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வேலூர் அரசு மருத்துவமனையின் கரோனாவார்டில் முறையான வசதிகள் இல்லை என தொடர்ந்து புகார் வருகிறது.

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தினமும் ஒவ்வொருகோவிட்-19 நோயாளிக்கும் 4-5 லிட்டர் தண்ணீர் கொடுக்கின்றனர். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தண்ணீரைக்கூட முறையாக கொடுப்பதில்லை என்று புகார்எழுந்துள்ளது. எனவே, அங்கும் தினமும் 4 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினோம். அதைசெய்வதாக அவரும் உறுதியளித்துள்ளார்’’ என்று தெரிவித்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனாதொற்று தடுப்பு பணி குறித்து 32 தகவல்களை கேட்டு ஆட்சியர் கந்தசாமியை சந்தித்து திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் நேற்று மனு அளித்தனர்.

பின்னர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறும்போது, "நகரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கரோனா பாதிப்பு, கிராமப்புற பகுதிகளிலும் பரவிவிட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி வரை 2,181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தடுக்க இம்மாவட்டத்தில் ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் எவை என்பன உள்ளிட்ட 32 தகவல்களை கேட்டு ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம்" என்றார். அப்போது, எம்பி அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் பிச்சாண்டி, கிரி, சேகரன், அம்பேத்குமார், மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x