கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் நாவலர் நெடுஞ்செழியன் பெயரில் உலகளாவிய தமிழ் விருது

கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் நாவலர் நெடுஞ்செழியன் பெயரில் உலகளாவிய தமிழ் விருது
Updated on
3 min read

உலகப் புகழ்பெற்றதும் 193 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டதுமான கனடா நாட்டின் டொரண்டோ பல்கலைக்கழகம், நாவலர் நெடுஞ்செழியன் பெயரால் உலகளாவிய தமிழ் விருது ஒன்றை நிறுவியிருக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ ஒப்பந்தம் ஒன்றை கனடா வாழ் தமிழ் சமூகத்துடன் கையெழுத்திட்டிருக்கும் செய்தியை, ‘இந்து தமிழ் திசை’ பிரத்யேகமாக வழங்குகிறது.

கனடா நாட்டுக்கு 4 பிரதமர்களையும் 14 உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் நோபல் பரிசு பெற்ற 10 ஆளுமைகளையும் 4 பிற நாட்டுத் தலைவர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியது டொரண்டோ பல்கலைக்கழகம். மேலும், கற்பித்தலுக்கும், ஆராய்ச்சிக்கும் உரிய பல்கலைக்கழகமாக இது விளங்குவதால், உயர்கல்வி, ஆய்வு மாணவர்களுக்கும் மொழிசார் புலமையாளர்களுக்கும் போதிய வாய்ப்புகளை அளித்துவருகிறது. தமிழ் மொழிக்கும் உயரிய முக்கியத்துவத்தை இப்பல்கலைக்கழகம் வழங்கிவருகிறது. அதற்கான காரணமும் இல்லாமல் இல்லை.

தமிழ் வளர்க்கும் நாடு

1948-ம் ஆண்டு தொடங்கி தமிழர்கள் கனடாவில் குடியேறி வாழத் தொடங்கினர். 1970-ம் ஆண்டில் சுமார் 5 ஆயிரம் தமிழ்க் குடும்பங்கள் குடியுரிமை பெற்றிருந்தன. 1980-ல் அது மேலும் பலமடங்கு அதிகரித்தது. இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் கனடாவில் குடிபெயர்ந்து வாழும் தமிழ்க் குடும்பங்களின் எண்ணிக்கை இன்று 3 லட்சத்தைக் கடந்துள்ளது. னடாவின் வளர்ச்சியில், அங்கே குடியேறி வாழும் தமிழர்களின் பங்களிப்பும் அவர்கள் காட்டிவரும் சமூக அக்கறையும் அந்நாட்டவரால் பெரிதும் மதித்துப் போற்றப்பட்டு வருகிறது.

எம்.ஜி.ஆருடன் நாவலர் நெடுஞ்செழியன்
எம்.ஜி.ஆருடன் நாவலர் நெடுஞ்செழியன்

தமிழ் மரபு மாதம்

கனடா நாட்டின்நாடாளுமன்றம் 2016-ம் ஆண்டு, ஜனவரி மாதத்தைத் தமிழ் மரபு மாதமாக அறிவித்தது. அதன்படி 2017-ம் ஆண்டிலிருந்து ஜனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா முழுவதும் கொண்டாடப்படுகிறது. கனடா நாட்டின் அரசு, இது சார்ந்த கொண்டாட்டங்களுக்கு நிதி வழங்கியும் ஊக்குவிக்கிறது. அத்துடன், உலகில் ஒரு பல்கலைக்கழகம் வருடா வருடம் தமிழ் மரபையும் பண்பாட்டையும் போற்றி விழா எடுக்கிறது என்றால் அது கனடாவில் உள்ள 96 பல்கலைக்கழகங்களில் முதலிடம் வகிக்கும் டொரண்டோ பல்கலைக்கழகம் மட்டுமே.

முதல் உலகளாவிய விருது

தற்போது மேலும் ஒரு இனிய செய்தியாக, தமிழின் மேன்மையைப் பரப்புவதில் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்ட ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க முடிவுசெய்தது. இதற்கான ஒப்பந்தத்தை, கனடாவாழ் சமூகத்துடனும் இந்த விருதை நிறுவிடப் பெரும் தொகையை வைப்பு நிதியாக வழங்கிய தமிழ் மருத்துவருடனும் (பெயரை வெளியிட அவர் விரும்பவில்லை) கையெழுத்திட்டுள்ளது.

இந்த விருது உலகளாவிய ஒன்று. இலக்கணம், இலக்கியம், மொழியியல், தமிழ்க்கல்வி ஆகிய துறைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு, தமிழின் மேன்மைக்கு முதலிடம் தந்து, வாழ்நாளில் தமிழ்த் தொண்டாற்றிவரும் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படும். கனடா நாட்டின் டொரண்டோ பல்கலைக்கழக வளாகத்தின் நடுக்கூடத்துக்கு விருது பெறுபவர் வரவேற்கப்பட்டு, அவையோர் முன்னிலையில் கௌரவிக்கப்படுவார். இவ்விருது, டொரண்டோ பல்கலைக்கழகத்தின் பாராட்டுச் சான்றிதழ், விருது, பணமுடிப்பு ஆகியவை அடங்கியது.

மா.பொ.சி. உடன் நாவலர் நெடுஞ்செழியன்
மா.பொ.சி. உடன் நாவலர் நெடுஞ்செழியன்

நூற்றாண்டு நாயகரை நினைவில் நிறுத்த..

அறிஞர் அண்ணா திமுக கழகம் கண்டபோது அதில், துணைப் பொதுச்செயலாளர், பின்னர் பொதுச்செயலாளர், கட்சிப் பத்திரிகையின் ஆசிரியர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கட்சி அவைத்தலைவர், அமைச்சரவையில் தனக்கு அடுத்தஇடம் எனப் பெரிய பொறுப்புகளை நெடுஞ்செழியனுக்கு அளித்து அழகு பார்த்தார் அண்ணா. ‘தம்பி வா... தலைமையேற்க வா!’ என்று அவரால் அழைக்கப்பட்டவர்.

தமிழிலக்கணத்தில் வல்லவரான நெடுஞ்செழியன், இலக்கியம், வரலாறு, அரசியல்அறிவியல் ஆகியவற்றில் அருவிபோல் மேடைத்தமிழில் முழங்கியதால் அவரை ‘நாவலர்’ என்ற பட்டம்தேடி அடைந்தது. கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டிருந்தபோதும், ராமாயணம், மகாபாரதம், பெரியபுராணம் ஆகியவற்றில் மணிக்கணக்கில் உரையாற்றும் அவரடு வல்லமை கண்டு தமிழகம் வியந்திருக்கிறது. பெரியாரிடம் தொடங்கி அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எனப் பயணித்த அவரது அரசியல் பயணத்தில், தமிழ் வளர்த்த அறிஞராக நாவலர் நெடுஞ்செழியனின் தமிழ்ப் பணி போற்றுதலுக்குரியது. பேசும் கலை வளர்த்த நாவலர் நெடுஞ்செழியனின் பேச்சு மொழியும் தமிழ்ப் பணியும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படவில்லை. அந்தக் குறையைப் போக்கும்வகையில் நாவலரின் பெயரில் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் இந்த விருது ‘தகைசால் தமிழ் இலக்கிய விருது’ என அழைக்கப்படும்.

அண்ணா, கலைஞருடன் நாவலர்.
அண்ணா, கலைஞருடன் நாவலர்.

முதல் விருது எப்போது?

முதல் விருது, டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை இயங்கத் தொடங்கிய பின்னர், அதன் தலைமைப் பேராசிரியரின் வழிகாட்டலில் தேர்வுக்குழு அமைத்து வழங்கப்படும். உலகத்தின் எந்தப் பகுதியில் இருந்தும், தமிழ்ப் பணியாற்றிய தகுதியின் அடிப்படையில், அந்த ஆண்டுக்கான விருதாளர் தெரிவு செய்யப்படுவார். புகழ்பெற்ற ஓர் அயல்நாட்டுப் பல்கலைக்கழகத்தால் உலகளாவிய தமிழ் விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்ற வகையில் முக்கியத்துவம் பெறும் இவ்விருதானது, நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவில் தொடங்கி ஆண்டுதோறும் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதை நிறுவிய பெயர் வெளியிட விரும்பாத தமிழருக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in