

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய ‘போபோஸ்’ துணைக்கோளை இஸ்ரோவின் மங்கள்யான் விண்கலம் படம் எடுத்து அனுப்பிஉள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், பல்வேறுகட்ட பயணங்களுக்குப் பின் 2014-ம்ஆண்டு செப்டம்பரில் அதன் சுற்றுப்பாதையை அடைந்தது. அதன்பின் கடந்த 5 ஆண்டுகளாக செவ்வாய்கிரகத்தை சுற்றிவந்து ஆய்வுசெய்து வருகிறது. அதில் பல்வேறு முக்கிய தகவல்கள் நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
அந்தவரிசையில் செவ்வாய் கிரகத்தின் ‘போபோஸ்’ என்ற துணைக்கோளை படம் எடுத்து மங்கள்யான் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘செவ்வாய்க்கு மிக அருகில் இருக்கக்கூடிய அதன் மிகப்பெரிய துணைக்கோளான ‘போபோஸை’ கடந்த ஜூலை 1-ம் தேதி மங்கள்யான் படம் பிடித்து அனுப்பியுள்ளது.
இந்த படங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து 7,200 கிமீ தூரமும்,‘போபோஸ்’ கோளில் இருந்து4,200 கிமீ தூரமும் கொண்ட சுற்றுப்பாதையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. தற்போது அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் பெரிய பள்ளம் உருவாகியுள்ளதை படங்களின் மூலம் காணமுடிகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.
நிலவைவிட சிறியது
இந்த ‘போபோஸ்’, ‘கார்போனசியஸ் சான்டிரைட்ஸ்’ என்ற வகைவிண்கற்கள் கலவைகளாக இருப்பதாகவும், செவ்வாய் கிரகத்தின் பெரிய துணைக்கோளாக இருந்தாலும், இது நம் நிலவைவிட அளவில் சிறியதுதான் என்றுவிஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக் கப்பட்டது.