

தமிழக, கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற கப்பல் நிறுவனத்திடம் இழப்பீடு கோரலாம் என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்ளித்துள்ள நிலையில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரள கடல் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி எம்.வி என்ரிகா லெக்சி எனும் இத்தாலியை சார்ந்த எண்ணெய் கப்பல் வந்து கொண்டிருந்த பொழுது அங்கு தமிழக மற்றும் கேரள மீனவர்கள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த எண்ணைக் கப்பலில் இருந்த இத்தாலிய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கன்னியாகுமரி மாவட்டம் இறையும்மன் துறையை சேர்ந்த அஜீஸ் பிங்கு, கேரளாவைச் சார்ந்த ஜெலஸ்டின் ஆகிய இரண்டு மீனவர்களை உயிரிழந்தனர். மேலும் 9 பேர்கள் காயமடைந்தனர்.
இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் இத்தாலி நாட்டைச் சேர்ந்த எண்ணெய் கப்பலை இந்திய கடலோர காவல்படையினர் கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு வந்து துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான மஸிமிலியானோ லட்டோர், சால்வடோர் கிரோனி ஆகிய இரண்டு இத்தாலிய கடற்படை வீரர்களை கேரள போலீஸார் கைது விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையின் போது மீனவர்களை கடல் கொள்ளையர்கள் என்று தவறாக நினைத்து விட்டதாக இத்தாலி கடற்படையினர் தெரிவித்தனர்.
இதில் உடல் நலத்தைக் காரணம் காட்டி 2014ம் ஆண்டில் இத்தாலிக்கு அனுப்பப்பட்ட மஸிமிலியானோ லட்டோர் என்ற கடற்படை வீரர் இந்தியாவுக்கு திரும்ப முடியாது என்று அறிவிக்கப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் சர்வதேக கடற்பரபில் நடைபெற்றதால் இந்திய சட்டங்களின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கோரி இத்தாலி 2015ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. 2016ம் ஆண்டு சர்வதேச நீதிமன்ற உத்திரவின்படி மற்றொரு கடற்படை வீரரான சால்வடோர் கிரோனியையும் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதீமன்றம் வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பில் , இத்தாலி கடற்படையினர் சுட்டுக் கொன்ற மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் இத்தாலிய கப்பல் நிறுவனத்தின் ஊழியர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்கு பெற முடியும். ஆனால் கொலை வழக்காக இத்தாலிய சட்டங்களின்படி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். மேலும் இந்திய தரப்புக்கு இழப்பீடு பெறுவதற்கு உரிமை உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் சர்ச்சில் கூறியதாவது,
இது போன்று ஜப்பான் நாட்டு மீனவர்களை அமெரிக்க கடற்படை வீரர்கள் கொன்ற வழக்கில் அமெரிக்கா ரூ. 90 கோடி இழப்பீடு வழங்கி உள்ளது. அது போல இத்தாலி கப்பல் நிறுவனத்தின் ஊழியர்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழக மற்றும் கேரள மீனவர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 100 கோடியும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 கோடியும் இழப்பீடு வழங்க வேண்டும், என்றார்.