

சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்கியதில் தந்தை, மகன் மரணமடைந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேரும் இன்று மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் 5 பேரும் தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தூத்துக்குடி மாவட்டம் பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேரும் இன்று மாலை திடீரென மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.