

‘‘ஆட்சியாளர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதால் தான் கரோனா பாதிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது,’’ என முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் குற்றச்சாட்டியுள்ளார்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையிலான திமுகவினர் ஊரடங்கு சமயத்தில் அரசு செய்துள்ள நடவடிக்கைகளை பற்றிய கேள்விகள் அடங்கிய மனுவை ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் அளித்தனர்.
பிறகு கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா தொற்று தடுப்பதில் அரசு நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை என திமுக தலைவர் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஆலோசனைகள் சொல்வதை கூட இந்த ஆட்சியாளர்கள் ஏற்பதில்லை. மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வே அரசிடம் இல்லை. இதனால் கரோனா வேகமாக பரவி வருகிறது. கரோனா காலத்தில் மக்களை காக்க வேண்டிய அரசு, ஊழல் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது.
ஆட்சியாளர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதால் தான் கரோனா பாதிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் 2-ம் இடத்திற்கு வந்துள்ளது, என்று கூறினார்.
மாவட்டத் துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, நகரச்செயலாளர் துரைஆனந்த், ஒன்றியச் செயலாளர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.