மழைக்காலத்தில் கரோனா தொற்று பரவ வாய்ப்பு; முன்னரே தூர்வார உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மழைக்காலத்தில் கரோனா தொற்று பரவ வாய்ப்பு; முன்னரே தூர்வார உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Updated on
1 min read

மழைக்காலத்தில் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால் மழைக்காலம் தொடங்குவதற்கு முன் மழைநீர் வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித் தூர்வாருமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டியில் நகராட்சிக்குச் சொந்தமான 32 குளங்களும், இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 14 குளங்களும் உள்ளன. இந்தக் குளங்களுக்கு மழைநீர் செல்வதற்கான வடிகால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்களால் அடைக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குளங்களில் 5 குளங்கள் தனியார் மருத்துவமனையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த மாதம் தொடங்கவுள்ள மழைக்காலத்தில் தண்ணீர், குளங்களுக்குச் செல்ல முடியாமல் தெருக்களில் தேங்கிவிடும் என்றும், சுகாதாரமின்மையால் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவர வாய்ப்புள்ளதாகவும் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.கே.அய்யப்பன் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.

முறையாகத் தூர்வாரும்படி திருத்துறைப்பூண்டி நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், முறையாகத் தன் மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in