

சேவாபாரதி மீது பொய் பிரச்சாரம் செய்யும் திருமாவளவன், சுந்தரவள்ளி, மனோஜ்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்த அமைப்பின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ரபு மனோகர், சென்னை கீழ்ப்பாக்கம் சரக காவல் துணை ஆணையரைச் சந்தித்து புகார் மனு அளித்தார்.
புகார் மனுவில் ரபு மனோகர் கூறியுள்ளதாவது:
''சாத்தான்குளம் படுகொலையில் ஆர்எஸ்எஸ், சேவாபாரதி பின்னணி இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன், சுந்தரவள்ளி, மனோஜ்குமார் ஆகியோர் பேசிய யூடியூப் வீடியோக்களைப் பார்த்தேன். அந்த 3 வீடியோக்கள் முழுவதும் பொய்யான தகவலும் சாத்தான்குளம் வழக்கு விசாரணையைத் திசை திருப்பும்விதமாக குற்ற மனப்பான்மையுடன் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு இறந்துபோன வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்றத்தால் நேரடியாகக் கண்காணிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையைத் திசைதிருப்பும் நோக்கிலும் உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கிலும் திருமாவளவன், சுந்தரவள்ளி, மனோஜ்குமார் ஆகியோர் மக்களுக்கு தவறானத் தகவல்களைத் தருகிறார்கள்.
உண்மையில் சாத்தான்குளத்தில் சேவாபாரதி என்ற அமைப்பே இல்லை. தமிழகத்தில் எந்த காவல் நிலையத்திலும் போலீஸாருடன் இணைந்து ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற பெயரில் சேவாபாரதி அமைப்பினர் பணி செய்யவே இல்லை. வீடியோவில் அதைப் பதிவிட்டவர்கள், எந்த ஊரைச் சேர்ந்த சேவாபாரதியினர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஆகப் பணியாற்றுகிறார் என்று கூறவில்லை.
பொதுவான குற்றச்சாட்டை வேண்டுமென்றே தவறான உள்நோக்கத்தில் பரப்பி விடுகிறார்கள். கரோனா என்ற கொடிய நோய் தீவிரமாகப் பரவி வரும் இக்கட்டான காலகட்டத்தில் காவல்துறையினருடன் இணைந்து பொது இடங்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல், பொதுமக்களுக்கு உணவு வழங்குதல், மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளுக்கு உணவு வழங்குதல் போன்ற பணிகளை சேவாபாரதி அமைப்பு தமிழகம் முழுவதும் செய்து வந்தது. மேலும் சுனாமி, வெள்ளம், புயல் போன்ற இக்கட்டான சூழ்நிலையில் சேவா பாரதி அமைப்பினர் பல லட்சம் பேருக்கு உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளைச் செய்துவந்தனர் என்பது வெளிப்படையான உண்மை.
கரோனா காலத்தில் பல்வேறு பகுதிகளிலும் பல லட்சம் பொதுமக்களுக்கு மற்றும் மருவத்துவமனையில் உள்ள அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அடிப்படை உதவிகளையும் சேவாபாரதி அமைப்பினர் செய்து வந்தனர். இதனால் சேவா பாரதி அமைப்பின் மீது பொதுமக்களுக்கு நற்பெயரும் மரியாதையும் உயர்ந்து வந்தது.
இந்நிலையில் சேவாபாரதி அமைப்பிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் சாத்தான்குளம் காவல்நிலையம் கொலைவழக்கில் வழக்கு விசாரணையைத் திசைதிருப்பும் விதமாகவும் பொய்யான தகவல்களை மக்களுக்கு அளித்து இரண்டு பிரிவினர்களிடையே கலகம் ஏற்படுத்த முயற்சி செய்து அதன் மூலம் லாபம் அடையத் துடிக்கும் வீடியோகளைப் பதிவு செய்த நபர்கள் மீதும் அதற்குக் காரணமானவர்கள் மீதும் அதனைத் தூண்டியவர்கள் மீதும் சட்டப்படியான முதல்நோக்கு வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது.
எனவே, மூன்று யூடியூப் சேனல்களையும் தடைசெய்து வீடியோக்களை வலைதளத்தில் இருந்து நீக்கவும், பொய்யான தகவலைப் பரப்பிய, தூண்டிய, உடந்தையாக இருந்த அனைவர் மீதும் இந்திய தண்டனைச்சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும்''.
இவ்வாறு ரபு மனோகர் தெரிவித்துள்ளார்.