

தூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் கழிவுநீரை தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலைகளை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி ஆகியோர் வழங்கினர்.
தூத்துக்குடி அருகேயுள்ள செக்காரக்குடி வடக்கு தெருவை சேர்ந்த சோமசுந்தரம் வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த இக்கிராஜா (17), பாலா (20), பாண்டி (28) மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த தினேஷ் (20) ஆகிய 4 பேரும் கடந்த 2-ம் தேதி சுத்தம் செய்தனர். அப்போது விஷவாயு தாக்கியதில் அவர்கள் 4 பேரும் உயிரிழந்தனர். இது குறித்து தட்டப்பாறை போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்கள்.
இந்நிலையில் 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோர் காசோலைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்கள் ஷில்பா பிரபாகர் சதீஷ் (திருநெல்வேலி), சந்தீப் நந்தூரி (தூத்துக்குடி), சட்டப் பேரவை உறுப்பினர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.