

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரத்தில் குறுவை நெல் சாகுபடி பணிகளை வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குநர் க.சங்கரலிங்கம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
லால்குடி வட்டாரம் மணக்கால் கிராமத்தில் இயந்திரம் மூலம் நடவு செய்யப்பட்ட நெல் வயலை க. சங்கரலிங்கம் இன்று (ஜூலை 4) பார்வையிட்டார்.
அப்போது அவர் பேசுகையில், "விவசாயிகள் அனைவரும் திருந்திய நெல் சாகுபடி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது குறைந்த செலவில் அதிக மகசூல் கிடைக்கும். இந்த ஆண்டு தமிழகத்தின் உணவு உற்பத்தி இலக்கான 137 டன்னை எட்ட முடியும்.
லால்குடி வட்டாரத்தில் குறுவை நெல் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 தண்ணீர் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து லால்குடி வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் 3,500 ஹெக்டேர் பரப்பளவு நெல் சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது.
சாதாரண முறையில் நடவு செய்வதை தவிர்த்து திருந்திய நெல் சாகுபடி மற்றும் இயந்திர மூலம் நடவு செய்யும் போது 20 சதவீதம் கூடுதல் மகசூல் பெற முடியும். திருந்திய நெல் சாகுபடி முறையில் ஒரு ஏக்கர் நெல் நடவு செய்ய 3 முதல் 5 கிலோ நெல் விதை போதுமானது.
மேட்டுப்பாத்தியில் நாற்றங்கால் அமைத்து மரச்சட்டங்களை வைத்து மண் மற்றும் தொழு உரம் நிரப்பி விதைக்க வேண்டும். 15 நாள் வயதுடைய நாற்றுகளை பறித்து 22.5 செ.மீட்டருக்கு 22.5 செ.மீட்டர் சதுர இடைவெளியில் நடவு செய்வதன் மூலம் அதிக வேர் வளர்ச்சி அதிக தூர் எண்ணிக்கை மற்றும் அதிக நெல் மணிகள் கிடைக்கும். நடவு செய்யும் போது 1 குத்துக்கு 1 அல்லது 2 நாற்றுக்கள் வைத்து நடவு செய்ய வயலில் லேசாக காய விட்டு நீர் விட வேண்டும்.
களைகளை கட்டுப்படுத்த நடவு செய்த 10-ம் நாள் முதல் 10 நாட்கள் இடைவெளியில் 3 முறை கோனோவீடர் களையெடுக்கும் கருவி மூலம் களையெடுக்க வேண்டும். காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி நன்றாக படுவதால் அதிக தூர்கள் வெடித்து ஏக்கருக்கு 3 டன் அளவுக்கு மகசூல் பெற முடியும்" என்றார்.