

தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 30 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினர் தனுஷ் எம்.குமார், மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன், மாவட்ட அவைத் தலைவர் முத்துப்பாண்டி, நகர செயலாளர் சாதீர் மற்றும் திமுக நிர்வாகிகள் தென்காசி மாவட்ட ஆட்சியரை இன்று நேரில் சந்தித்து மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினர்.
மேலும், ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், “தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், நோயாளிகளுக்கு கொடுத்த மருந்துகள், சிகிச்சை எடுக்கப்பட்ட நாட்கள் போன்ற விவரங்களை அளிக்க வேண்டும். எத்தனை பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது,
அரசால் கரோனா டெஸ்ட் கிட் எவ்வளவு வழங்கப்பட்டது, அது எந்தெந்த மருத்துவமனைகளுக்கு எவ்வளவு எண்ணம் வழங்கப்பட்டது என்று தெரிவிக்க வேண்டும். ரேபிட் கிட் டெஸ்ட் எடுத்துக்கொண்டவர்களின் பட்டியல், எந்த மருத்துவமனைகளில் எடுக்கப்பட்டது, பிசிஆர் டெஸ்ட் எடுத்தவர்களின் விபரம், எத்தனை பேர் தென்காசி மாவட்டத்திலிருந்து வெளியில் சென்றுள்ளார்கள், வெளி மாவட்டங்களிலிருந்து எத்தனை பேர் வந்துள்ளார்கள் என்ற பட்டியல் அளிக்க வேண்டும்.
நோயாளிகளுக்கு தேதிவாரியாக வழங்கப்பட்ட மருந்துகள், இதர உபகரணங்கள் பற்றிய விவரம், தனிநபர் கவச உடை எத்தனை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டது, மருத்துவர்கள், செவிலியர், பணியாளர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்ட விவரம், கரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன, மருத்துவர்கள், செவிலியர்கள் எத்தனை படுக்கையை கண்காணிக்கிறார்கள் என்ற விவரம் போன்றவற்றை தெரிவிக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் உள்ள வென்டிலேட்டர் வசதி, கிரிட்டிக்கல் கேர் சிகிச்சைப் பிரிவு எத்தனை உள்ளது, சிறப்பு மருத்துவர்களின் விவரம் போன்றவற்றை தெரிவிக்க வேண்டும். மேலும், பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எக்ஸ்ரே கருவி அமைக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
ஒரே நாளில் 30 பேருக்கு கரோனா:
தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 30 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் கேரளாவில் இருந்தும், ஒருவர் மகாராஷ்டிராவில் இருந்தும், ஒருவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் வந்தவர்கள்.
இருமல், காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களை சோதனை செய்ததில் 8 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே கரோனா தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை சோதனை செய்ததில் 19 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 426 ஆக உயர்ந்துள்ளது. 269 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 4 பேர் உயிரிழந்துவிட்டனர். இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களில் 6 பேர் தென்காசியைச் சேர்ந்தவர்கள், புளியங்குடியில் 5 பேர், ஆலங்குளம், இலஞ்சி, ராயகிரியில் தலா 3 பேர், வடகரையில் 2 பேர், கடையநல்லூர், விஸ்வநாதபுரம், சேர்ந்தமரம், குறுவன்கோட்டை, நாலான்குறிச்சி, சுரண்டை, கழுநீர்குளம், கீழப்புலியூரில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.