

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளியூர்களில் இருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமை முகாம்களி தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்காக நாகர்கோவில், கன்னியாகுமரி, களியக்காவிளை, மார்த்தாண்டம், ஆற்றூர், தூத்தூர் உட்பட பல பகுதிகளில் தனிமை முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், தனிமைப்படுத்துவோர் 3 ஆயிரம் பேரை எட்டும் நிலையில் உள்ளதாலும், மேலும் பல பள்ளி, கல்லூரிகளில் தனிமை முகாம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி அருகே குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தனிமை முகாம் அமைப்பதற்கான ஏற்பாடு நடந்து வந்தது.
இதற்கு அப்பகுதியில் மக்கள் நெருக்கும் உள்ளதால் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் வேறு இடத்தில் முகாம் அமைக்குமாறு ஏற்கனவே மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தனிமை முகாம் அமைக்கப்படும் பள்ளி முன்பு ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த பெண்கள் திரண்டனர். அவர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறும், மனித சங்கிலி அமைத்தும் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு நிலவியது.