

சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து செயல்படாமல் இருக்கும் காவல்துறை புகார் ஆணையத்தை மாற்றியமைக்கக்கோரி வழக்கு தொடர்ந்ததாக மக்கள் நீதி மய்யம் விளக்கம் அளித்துள்ளது.
காவல்துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் 'காவல்துறை புகார் ஆணையம்' அமைக்க வேண்டும் என பிரகாஷ் சிங் என்பவரின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழகத்தில் காவல்துறை சீர்த்திருத்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினருக்கு எதிராக புகார்கள் அளிக்க மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் அமைக்கப்பட்ட ஆணையத்தில் நீதிபதிகள் யாரும் நியமிக்கப்படவில்லை.
மாறாக, மாநில அளவிலான புகார் ஆணையத்திற்கு உள்துறை செயலாளர் தலைமையில் டி.ஜி.பி மற்றும் ஏ.டிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். மாவட்ட அளவிலான புகார் ஆணையத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமைக்கப்பட்ட 'காவல்துறை சீர்த்திருத்த அவசர சட்ட' விதிகளை சட்டவிரோதமானது என அறிக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளர் ஏ.ஜி.மவுரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தற்போது வழக்கு தொடரப்பட்டது ஏன் என்பது குறித்து மக்கள் நீதிமய்யம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்த மக்கள் நீதிமய்யத்தின் செய்திக்குறிப்பு:
“சாத்தான்குளம் தந்தை-மகன் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை தொடர்ந்து மக்கள் நீதி மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனுவைத் தாக்கல் செய்தது. அம்மனுவானது தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013-ல் நிறுவப்பட்டுள்ள காவல்துறையில் புகார் ஆணையத்தின் அமைப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அச்சட்டம் முறையானதாக இல்லை என்றும் நடைமுறை தன்மைக்கு போதுமானதாக இல்லை என்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு புறம்பானதாக உள்ளது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி காவல்துறை புகார் ஆணையமானது மாநிலம் தலைமை ஆணையம் மற்றும் மாவட்ட வாரியான ஆணையங்களாக அமைக்கப்பட வேண்டும். மாநில தலைமையகத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகளையோ பணியமர்த்த வேண்டும் என்றும் மாவட்ட வாரியான ஆணையங்களில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற காவலர் அல்லாத அரசு ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் இருக்கும் பட்சத்தில் இந்த அரசு அந்த வழிகாட்டுதல்களுக்கு மாறாக செயல்பட்டு அதன் விளைவு இந்த இரட்டை படுகொலை சம்பவம்.
இந்த அரசு ஆணையங்களை அமைத்து அதில் காவல் அதிகாரிகளை நிர்வாகிகளாக பணியமர்த்தி உள்ளதுதான் அதன் தோல்விக்குக் காரணம். அதுமட்டுமின்றி இவ்வாறு செய்தது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் அதன் சரத்துக்களும் எதிரானதாக உள்ளது. அதனால் மக்கள் நீதி மையம் கட்சி இந்த அரசின் மெத்தனப் போக்கை எதிர்த்து மேற்கண்ட சட்டத்தை திருத்தி ஆணைய அமைப்பை மாற்றியமைக்க நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்ட நேர்ந்துள்ளது”.
இவ்வாறு மக்கள் நீதி மையம் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.