Published : 04 Jul 2020 01:44 PM
Last Updated : 04 Jul 2020 01:44 PM

காணாமல் போகும் குழந்தைகள்; 5 ஆம் இடத்தில் தமிழகம்: தடுக்கும் வழிமுறைகள்

உலகெங்கும் குழந்தைகள் காணாமல் போவது, தினசரி வாடிக்கையாக உள்ளது. குழந்தைத் தொழிலாளர், குழந்தைத் திருமணம் மற்றும் குழந்தைக் கடத்தல் பொறுத்தவரை, இவை குறித்த பொதுவான வரையறையும், உத்தேச மதிப்பீடுகளும் இருக்கின்றன. ஆனால், எத்தனை குழந்தைகள் காணாமல் போகிறார்கள் என்ற உத்தேச மதிப்பீடுகள் உலக அளவில் எங்கும் தொகுக்கப்படவில்லை. இதற்கு முக்கியக் காரணம், காணாமல் போன குழந்தை என்பதற்கான பொதுவான, ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறை இதுவரை இல்லை. ஆகவே இப்பிரச்சினையைப் பொறுத்தவரை ஒரு சில நம்பத்தகுந்த புள்ளிவிவரங்கள் மட்டுமே உள்ளன.

2015இல் ரஷ்யாவில் 45,000 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். வருடந்தோறும், ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியாவில் தலா 20,000 குழந்தைகள், பிரிட்டனில் 80,000 குழந்தைகள், கனடாவில் 40,288 குழந்தைகள், துருக்கியில் 48,000 குழந்தைகள், ஜெர்மனியில் 1,00,000 குழந்தைகள், அமெரிக்காவில் 4,40,000 குழந்தைகள், தெற்கு ஆப்பிரிக்காவில் 1460 குழந்தைகள் காணாமல் போவதாக உத்தேசப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2019 ஆம் ஆண்டு, தெற்கு கொரியாவில் 21,551 குழந்தைகள் காணாமல் போனதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சிறார் நீதி (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம் 2016 - ன் விதி 92 (1) காணாமல் போன குழந்தைகளை வரையறை செய்கிறது. பெற்றோர் / சட்டபூர்வ பாதுகாவலர் அல்லது குழந்தையைப் பாதுகாக்க சட்டரீதியாக குழந்தையைப் பெற்றுக் கொண்ட நபர் / நிறுவனங்களுக்கு, (குழந்தைகள் காணாமல் போவதற்கான காரணங்கள் அல்லது சூழல் எதுவாக இருந்தாலும்) குழந்தை இருக்குமிடம் தெரியவில்லை என்றால், அது காணாமல் போன குழந்தை எனக் கருதப்படும். மேலும், அது இருக்கும் இடம் கண்டுபிடித்து அதன் நல்வாழ்வு உறுதிப்படுத்தும் வரை, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தையாகக் கருதப்படும்.

இந்தியாவில், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரப்படி, முந்தைய ஆண்டில் கண்டுபிடிக்கப்படாத குழந்தைகள் உள்பட காணாமல்போன மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை 2016-இல் 1,11,569 ஆகவும், 2017-இல் 1,19,013 ஆகவும், 2018இல் 1,15,656 ஆகவும் உள்ளது. 2016 ஆம் ஆண்டில் 63,407 குழந்தைகளும், 2017-ம் ஆண்டில் 63,349 குழந்தைகளும், 2018-ம் ஆண்டில் 67,134 குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர்.

2018-ல் தினசரி 184 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். சராசரியாக, 7 நிமிடத்திற்கு ஒரு குழந்தை காணாமல் போவது அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல். இதில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் உள்ளது. 2016 –ம் ஆண்டில் 65 சதவீதமாகவும், 2017- ம் ஆண்டில் 67.4 சதவீதமாகவும் மேலும் உயர்ந்து 2018- ல் 70.3 சதவீதமாகவும் உள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் பெண் குழந்தைகள் அதிக பாதிப்புக்கு உள்ளாவதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

மீட்கப்பட்ட குழந்தைகளின் சதவீதம் 50.1, 59.2, 61.5 ஆக முறையே 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டில் இருக்கிறது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மத்தியப் பிரதேசம் முதல் இடத்திலும் மேற்கு வங்காளம் இரண்டாம் இடத்திலும் டெல்லி யூனியன் பிரதேசம் மூன்றாம் இடத்திலும் (2018 ஆம் ஆண்டில் மட்டும் நான்காம் இடம்) பிஹார் மாநிலம் நான்காமிடத்தில் (2018 ஆம் ஆண்டில் மட்டும் மூன்றாமிடம்) தமிழகம் ஐந்தாம் இடத்திலும் இருக்கிறது. தேசிய அளவில், தமிழகம் மூன்றாண்டுகளாக ஐந்தாம் இடத்தில் தொடர்வது, குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்க போதிய முயற்சி எடுக்கப்படவில்லை என்ற கருத்தை வலியுறுத்துவதாக உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 2016இல் 4,632 குழந்தைகள், 2017இல் 4196 குழந்தைகள் 2018இல் 4071 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இது தினசரி சுமார் 12 குழந்தைகள் காணாமல் போவதைக் காட்டுகிறது. 2016- ல் 80.3, 2017-ல் 81.8 மற்றும் 2018-ல் 75.7 சதவீதக் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இது, தேசிய சராசரியை விட தமிழகம் முன்னணியில் இருப்பதைக் காட்டுகிறது.

குழந்தைகள் காணாமல் போவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. கீழ்க்கண்ட காரணங்கள் முழுமையான பட்டியல் இல்லை. ஆனால், குழந்தைகள் காணாமல் போவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. பள்ளிச் சூழல்-ஆசிரியர் துன்புறுத்தல்கள், கூடுதலான தண்டனைகள், குழந்தை நேயமற்ற கல்விச் சூழல்; குடும்பச்சூழல்-வறுமை, குடிகாரத் தந்தை, மாற்றாந்தாய்/ தந்தை பெற்றோர்களிடையே சண்டை, பெற்றோரின் சுகவீனம், பெற்றோர் / உடன் பிறந்தோரின் துன்புறுத்தல்கள், ஆறுதல் சொல்ல ஆட்கள் இல்லாதது; சமூகச் சூழல்-மத வேறுபாடுகள், சாதிய ஆதிக்கம், நண்பர்களின் வற்புறுத்தல்கள், போதிய வழிகாட்டுதல் இன்மை, குழந்தைகள் கடத்தப்படுவது, நகரங்கள் மீதான ஈர்ப்பு போன்றவை.

பள்ளிச் சூழலும் குடும்பச் சூழலும் சரியாக இருந்தாலே பெரும்பாலான குழந்தைகள் காணாமல் போவது தடுக்கப்படும். பல்வேறு சூழல்களால் நிறைய குழந்தைகள் தாமாகவே வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். பொதுவாக, குறைந்த கட்டணம் / பயணச் சீட்டு இன்றி பயணிக்க முடியும், கண்காணிப்பு குறைவு, முக்கிய நகரங்களுக்கு இணைப்பு இருப்பது போன்ற காரணங்களுக்காக, இவர்கள் தேர்ந்தெடுப்பது ரயில் போக்குவரத்தைத்தான். வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகள் ஒரு கட்டத்தில் கடத்தல்காரர்களின் கையில் அகப்பட்டு குற்றச்செயல்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் தன்பாலின உறவு, பாலியல் தொழில், குழந்தைத் தொழில் போன்றவற்றில் ஈடுபடுத்தப்பட்டு குழந்தைகளுக்கான அனைத்து உரிமைகளையும் இழக்கிறார்கள்.

2013-ம் ஆண்டு வரை இந்தியாவில் காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகளுக்கு குற்ற எண் வழங்கப்படவில்லை. ஜீரோ முதல் தகவல் அறிக்கை (Zero FIR) மட்டுமே பதியப்பட்டு வந்தது. இந்திய தண்டனைச் சட்டத்தில் காணாமல் போனவர்களைப் பற்றிய வழக்குகளைப் பதிய இதுவரை எந்தப் பிரிவுகளும் இல்லை. அதற்கான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.

காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகளின், பிரச்சினைகள் தொடர்பாக Bachpan Bachao Andolan (BBA) தொடர்ந்த வழக்கில் 21/05/2013 அன்று உச்ச நீதிமன்றம், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணாமல் போன குழந்தைகளைப் பற்றிய வழக்குகளைப் பதிய உத்தரவிட்டது. இது காணாமல் போன குழந்தைகளைப் பாதுகாப்பதில் இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல் உத்தரவாக அமைந்தது. நீதிபதி அல் தாமஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச், இந்தியாவில் காணாமல் போன குழந்தைகளின் அனைத்து வழக்குகளும் அறியக்கூடிய குற்றமாக (cognizable) பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். விசாரணையில் குழந்தைகள் காணாமல் போனது நிரூபிக்கப்படாவிட்டால், அவர்கள் கடத்தப்பட்டவர்களாக அனுமானம் செய்யப்படவேண்டும் என்று கூறியுள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக கருதப்பட்டாலும், நடைமுறையில் கடத்தல் வழக்காகப் பதிவு செய்யப்படுவதில்லை.

தமிழகத்தில், கடந்த ஜூன் 2019 -ல் ,நீதிபதி கிருபாகரன் மற்றும் நீதிபதி அப்துல் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பென்ச் ''ஒவ்வொரு நாளும் இந்த நீதிமன்றத்தின் முன் காணாமல் போனவர்களை ஆஜர்படுத்துவதற்காக பல ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்திய தண்டனைச் சட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றி எந்தக் குற்றப் பிரிவும் இல்லாதபோது, அது கொள்கை வகுப்பாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். இதனால் காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டத்தில் சேர்க்க சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளார்கள். மேலும் காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகளை இந்திய தண்டனைச் சட்டத்தில் பதிவு செய்ய எந்த ஏற்பாடுகளும் இல்லாத நிலையில் ,IPCஇல் குறிப்பிடப்படாத ஒரு குற்றம் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது? அத்தகைய வழக்குகளில் FIR எப்படி பதிவு செய்யப்படுகின்றன? என்ற கேள்வியை அதிர்ச்சியுடன் எழுப்பியுள்ளனர். மேலும் தாமாகவே முன்வந்து, குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 174-ஐ திருத்தி காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளை ஏன் சேர்க்கக் கூடாது என மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், உள்துறை அமைச்சகச் செயலர் மற்றும் டிஜிபிக்கு கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால், இதுகுறித்து மேல் நடவடிக்கை எடுத்ததாக தகவல் எதுவுமில்லை.

அரசு அங்கொன்றும் இங்கொன்றுமாக காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க சில நடவடிக்கைகளைப் பரிட்சார்த்த முறையில் எடுத்துக் கொண்டிருக்கிறது. இது போதுமானதாக இல்லை. குழந்தைகள் காணாமல் போகும் முன் அதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதே இந்தப் பிரச்சினையைப் பெருமளவில் குறைக்க உதவும்.

பிரதிநிதித்துவப் படம்.

முன்னரே கூறியபடி, பள்ளிச் சூழல், குடும்பச் சூழல் மற்றும் சமூகச் சூழல், குழந்தைகள் காணாமல் போவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. கோவிட் -19 இன் கடுமையான தாக்கத்தால், பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாக சிதைந்துள்ளன. பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணையவழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்படும்பொழுது, குழந்தைகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். ஏற்கெனவே அதிகமான குழந்தைகள் தமிழகத்தில் காணாமல்போன வண்ணம் இருக்கிறார்கள். கோவிட் -19, கல்வி, பொருளாதாரம், உடல்நலம், பிழைப்பாதாரம் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குழந்தைகளை அதிகமாகத் தாக்கி, வீட்டை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்படுவார்கள். இந்தச் சூழலில் இருந்து குழந்தைகளை மீட்க விரிவான செயல் திட்டமும் தீவிர கண்காணிப்பும் தேவைப்படுகிறது.

முதலாவதாக குடும்பங்களின் பிழைப்பாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குடும்பச்சூழல் மற்றும் பொருளாதார நிலை, நல்ல நிலையில் இருந்தால் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறுவது பெருமளவில் தடுக்கப்படும். ஆகவே , ஊறுபடத்தக்க குழந்தைகளையும், குடும்பங்களையும் கண்டறிந்து பிழைப்பாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

இரண்டாவதாக, பள்ளிகள் திறக்கும் முன்பே, பாடத்திட்டங்களை பாதியாகக் குறைத்து, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். பள்ளிகளுக்கு மாற்றாக, ஊரடங்கு காலத்தில் நுண் வகுப்பறைகள் நடத்த ஆலோசனைகளை கல்வியாளர்கள் வழங்கி வருகிறார்கள். இதை கிராம தன்னார்வலர்கள் மூலமாக செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு துன்புறுத்தல் இல்லா நிலையை உருவாக்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கு ஒவ்வொரு பள்ளிகளிலும் தேவைக்கேற்ப ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். இது குழந்தைகளைப் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்க உதவும். குழந்தைகள் நேயப் பள்ளிக்கு குறியீடுகள் வைத்து, ஒவ்வொரு பள்ளியையும் குழந்தையை நேயப் பள்ளியாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும். குழந்தை நேயப் பள்ளிகள் மாணவர்களைப் பெருமளவு பள்ளியில் தக்கவைக்க உதவி செய்யும்.

மூன்றாவதாக, கிராம குழந்தைகள் பாதுகாப்புக் குழு மற்றும் ஊராட்சி பிரதிநிதிகளை ஈடுபடுத்திக் குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டும். சமூக அமைப்புகளின் பங்கு, குழந்தைககள் வீட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கவும் பள்ளிகளில் தொடர்ந்து கல்வி பயிலவும் முக்கியம்.

நான்காவதாக, அனைத்து அரசு பேருந்து ஓட்டுநர்கள் / நடத்துநர்களுக்கு தனியாக வரும் குழந்தைகளை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஊக்குவிக்க வேண்டும். அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள வியாபாரிகள், அலுவலர்கள், காவல்துறையினர், சிஆர்பி/ஆர்பிஎஃப் மூலம் தனியாகப் பாதுகாப்பின்றி வரும் குழந்தைகளை இனம்கண்டு உரிய நடவடிக்கை எடுக்க பயிற்சி கொடுக்க வேண்டும். குழந்தைகளைக் கண்டுபிடிக்க நவீன உத்திகளைப் பரவலாக்க வேண்டும். (உதாரணமாக Facial Recognition கருவி).

ஐந்தாவதாக, தற்போது காவல்துறையினர் காணாமல் போன குழந்தைகளுக்காக ஒரு இணையதளம் (https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/MissingHomePage) வைத்திருக்கிறார்கள். மத்திய அரசு KHOYA PAYA என்ற இணையதளத்தை வைத்திருக்கிறது.

பாலமுருகன்

தமிழகத்தில், காணாமல் போன குழந்தைகள் பற்றிய நிலை தெரிந்துகொள்ள உருவாக்கப்பட்ட இணையதளம் செயல்படவில்லை. (https://trackthemissingchild.gov.in/trackchild/tamilnadu). பயனாளர்கள் எளிதாகப் பயன்படுத்த, தகவல் தெரிவிக்க, ஒருங்கிணைந்த இணையதளத்தை உருவாக்கி தரவுகளை நிர்வாகம் செய்ய வேண்டும்.

ஆறாவதாக, காணாமல் போன குழந்தைகளை ஒரு மாதத்திற்குள் கண்டுபிடிக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, கடத்தல் வழக்கைப் பதிவு செய்ய வேண்டும். அதற்கேற்ப, தற்போது உள்ள சட்டங்களில் மற்றும் செயல்பாட்டு நெறிமுறைகளில் (SOP) மாற்றம் செய்யப்பட வேண்டும்.

இறுதியாக, மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முழுமையாகச் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். போதிய நிதிவசதி, உட்கட்டமைப்பு, மனிதவளம் போன்றவற்றுடன் செயல்படும் ஆணையமாக மாற்ற வேண்டும். ஒருங்கிணைந்த இச்செயல்பாடுகளை செயல்படுத்த, அரசு இப்பொழுதே திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுத்தால், தேசிய அளவில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் தமிழகத்தை, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான மாநிலமாக மாற்றி குழந்தைகள் காணாமல் போவதை பெருமளவில் தடுக்க முடியும்.

முனைவர் ப. பாலமுருகன்,
மனித உரிமைச் செயற்பாட்டாளர்,
தொடர்புக்கு: balaviji2003@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x