Published : 04 Jul 2020 11:40 AM
Last Updated : 04 Jul 2020 11:40 AM

கரோனா களப்பணி; தேர்வுகள் நடைபெறாததும் விரைந்து ஊதியம் தராததும் மன உளைச்சலைத் தருகிறது: பயிற்சி மருத்துவர்கள் கூட்டமைப்பு வேதனை

மேற்படிப்பு பயிற்சிக் காலத்தை முடித்த எங்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் இருப்பது மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது. தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்ற தெளிவு இல்லாமல், கரோனா பணிகளுக்கு இடையே தேர்வுகளுக்குத் தயார் செய்யவும் முடியாமல் மிகுந்த வருத்தத்தில் உள்ளோம் என்று பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், பணியில் சேர்ந்துள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் ஒப்பந்த மருத்துவ அலுவலர்களுக்கு விரைந்து ஊதியம் வழங்கிட வேண்டும் என்றும் அக்கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை:

''கரோனா (COVID-19) பெருந்தொற்றுக்கான போராட்டத்தில் முன்களப் பணியாளர்களாக தமிழ்நாடு பயிற்சி மருத்துவர்களும் , பட்டமேற்படிப்பு மருத்துவர்களும் , உயர் சிறப்பு மேற்படிப்பு மருத்துவர்களும் இரவும் பகலும் எங்களது பணியினை அனைவரும் பாராட்டும் விதத்தில் மேற்கொண்டு வருகிறோம். சங்கடங்கள் நிறைந்த இந்த இக்கட்டான நேரத்தில் அனைத்து நோயாளர்களையும் மிகவும் பரிவுடனும் ,கவனத்துடனும் சிகிச்சை அளித்து வருகிறோம்.

தமிழகம் முழுவதிலுமிருந்து எம்.டி/ எம்.எஸ்/ டிப்ளமோ ஆகிய படிப்புகளை முடித்த எங்களை அரசு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் பணியமர்த்தியது. அரசின் அறிவுறுத்தலையும், தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை பெருகுவதைக் கருத்தில் கொண்டும் , நம்முடைய மக்களுக்கு பணியாற்ற சென்னைக்கு விரைந்தோம். ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தால் போக்குவரத்து இல்லாத காலத்திலும் நமது மருத்துவர்கள் அனைவரும் சிரமங்களுக்கு இடையிலும் தாமதம் இல்லாமல் பணியில் சேர்ந்தனர். இங்கு சென்னையில் நாங்கள் அனைவரும் எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டு இருக்கும் கரோனா வார்டுகளில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சையும் தன்னம்பிக்கையும் கொடுத்து அவர்கள் நோயில் இருந்து விரைந்து குணமடைய உதவி புரிந்து வருகிறோம்.

எங்கள் பணி முடித்து அனைவரும் அரசு ஏற்பாடு செய்திருக்கும் தனிமைப்படுத்தும் விடுதிகளில்/ ஹோட்டல்களில் தனிமையில் தங்கி இருக்கிறோம். இந்தப் பருவத்தில் எங்களுடன் பணியிலிருக்கும் சகமருத்துவர்களிடமிருந்தும் விலகியே இருக்கிறோம். பணிக்காலத்தில் பல மருத்துவர்கள் கரோனா நோய்த்தொற்றிற்கும் உள்ளாகி உள்ளனர். அவர்களில் பலர் நோயில் இருந்து மீண்டு, மீண்டும் கரோனா வார்டுகளில் பணிக்கு சேர்ந்தும் விட்டனர். இத்தகைய அர்ப்பணிப்பு உணர்வோடு மக்கள் பணியாற்றி கொண்டு இருக்கிறோம்.

இருந்தும் மேற்படிப்பு பயிற்சிக் காலத்தை முடித்த எங்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் இருப்பது மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது. தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்ற தெளிவு இல்லாமல், கரோனா பணிகளுக்கு இடையே தேர்வுகளுக்குத் தயார் செய்யவும் முடியாமல் மிகுந்த வருத்தத்தில் உள்ளோம். எம்.டி./ எம்.எஸ். தேர்வுகள் நடைபெறாததனால் நம் மாநில மருத்துவர்கள் AIIMS DM/MCh நுழைவுத்தேர்வில் கலந்துகொள்ள முடியவில்லை. அயராது உழைக்கும் நமது மருத்துவர்களுக்கு இது மிகுந்த மனவருத்தத்தைத் தருகிறது.

கரோனா பணி, குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் வாழ்தல், நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் என்று பல்வேறு இன்னல்களையும், மக்கள் பணி செய்வதற்காக இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டு பணியாற்றும் எங்களுக்கு இறுதித் தேர்வுகள் குறித்த நிலையில்லா சூழல் மிகுந்த மனவருத்தத்தைத் தருகிறது. முன்களப் பணியாளர்கள் என்றும் கோவிட் வாரியர்ஸ் என்றும் எங்களைக் கூறும் அரசு எங்களுடைய இந்தக் குறையை கனிவுடன் உடனடியான தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் பணியில் சேர்ந்துள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் ஒப்பந்த மருத்துவ அலுவலர்களுக்கு விரைந்து ஊதியம் வழங்கிடவும் கேட்டுக்கொள்கிறோம். எல்.பி.சி, எஸ்.ஆர்.புக். போன்ற நடைமுறைகளை இக்கட்டான காலத்திற்கு ஏற்ப எளிமைப்படுத்திட வேண்டுகிறோம்''.

இவ்வாறு பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x