

ஈரோடு: கரோனா தொற்றினைத் தடுப்பதற்காக மாவட்டங்களிடையே பயணிக்க இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள், ஈரோட்டில் பணிபுரிவதால் அவர்கள் பணிக்கு வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன் தினம் வரை பாதசாரிகளாக எல்லையைக் கடக்கின்றவர்களின் பெயர், விவரங்களைப் பதிவு செய்து கொண்டு போலீஸார் ஈரோடு நகருக்குள் செல்ல அனுமதித்து வந்தனர்.
ஆனால், இந்நடைமுறை நிறுத்தப்பட்டு, பாதசாரியாக வருபவர்களுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி அருகே நேற்று ஒன்று திரண்டு சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸார் அவர்களை விரட்டி அப்புறப்படுத்தினர்.
இருப்பினும் சோதனைச்சாவடியில் இருந்து ஒரு கிமீ தொலைவிற்கு மேல், காவிரி பாலம் கடந்து பள்ளிபாளையம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கூட்டத்தையும், வாகன ஓட்டிகளையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீஸார், ஒரு கட்டத்தில் சோதனை ஏதும் இன்றி அனைவரையும் ஈரோடு நகருக்குள் அனுமதித்தனர். கூட்டம் குறைந்த பிறகு மீண்டும் சோதனையில் ஈடுபடுவதும், கூட்டம் அதிகரித்தால் சோதனையின்றி வாகனங்களையும், பாதசாரிகளையும் அனுப்புவதுமாக போலீஸார் நடவடிக்கையில் ஈடுபடுவதால் பொதுமக்களிடையே தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.