Published : 04 Jul 2020 07:03 AM
Last Updated : 04 Jul 2020 07:03 AM

முழு ஊரடங்கு பயன் அளிக்காது; கைகழுவ சானிடைசரும் தேவையில்லை: கரோனாவை ஒழிக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன?- பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் கே.குழந்தைசாமி விளக்கம்

கே.குழந்தைசாமி

சென்னை

இந்தியாவில் கரோனாவை ஒழிக்க அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் கே.குழந்தைசாமி பல்வேறு விளக்கங்களை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில், கரோனா குறித்த அறிவியல் பூர்வமான தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் பொய் செய்திகளைத் தவிர்க்கவும் ‘கோவிட் 19 நோய் குறித்த உண்மைகள், தடுப்பு முறைகள், விழிப்புணர்வு’ என்ற தலைப்பில் மெய்நிகர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கே.குழந்தைசாமி பங்கேற்று பேசியதாவது:

கரோனா வைரஸ் கைகளால் 80%, பேசும்போது, இருமல், தும்மல்போன்ற நேரங்களில் வெளியேறும்நீர்த் திவளைகளை சுவாசிக்கும்போது 20% பரவுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கைகழுவும் பழக்கம் இல்லை. இந்தியாவில் உணவருந்துவதற்காக 6 முறை,மலம், சிறுநீர் கழிக்க செல்லும்போது சுமார் 4 முறை என தினமும்10 முறையாவது கை கழுவுகின்றனர்.

எண்ணெய், கொழுப்பால் ஆனது. அது நீரில் கரையாது. அதனுடன் சோப்பு சேர்த்தால் நீரில் எண்ணெய் கரைந்துவிடும். கரோனா வைரஸ் கொழுப்பு, புரதங்களால் ஆனவை. கையில் சோப்பு போடும்போது, அதில் வைரஸ்கள் கரைந்து அழிகின்றன.

மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் நோயாளிகளை தொடுவதால் பரவும் கிருமியை, சானிடைசர்கள் அழிக்கும். ஆனால் அழுக்கான கைகளில் உள்ள கிருமிகளை சானிடைசர்கள் அழிக்காது.

இஸ்ரேலில் கரோனா பரவத் தொடங்கியதும் முதியவர்கள் மற்றும் இணை நோயுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆரோக்கியமானவர்கள் வெளியில் விடப்பட்டனர். அதனால்அவர்களில் பெரும்பாலோருக்கு தொற்று ஏற்பட்டாலும், லேசான அறிகுறி, அறிகுறி இன்றி இருந்தனர். அதனால் அந்த நாடு சமூக நோய் எதிர்ப்புத் திறன் பெற்றது. தற்போது அந்த நாட்டில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

இந்தியாவில் முதியோர், ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நாட்பட்ட தொற்றா நோய் உடையவர்கள், கர்ப்பிணிகள் 40 சதவீதம் பேர் உள்ளனர். 60 சதவீதம் பேர் ஆரோக்கியமானவர்களாக உள்ளனர். அவர்களை வெளியில் விடவேண்டும்.

வீடுகளில் தனிமையில் இருப்போர் பல்ஸ் ஆக்சி மீட்டரால் பரிசோதித்துக்கொள்ளலாம். அதில் ஆக்சிஜன் அளவு 95 முதல் 100 வரை இயல்பான அளவு. 95-க்கு கீழ் குறைந்தால் மருத்துவரை நாட வேண்டும். 70 வரை குறையும்போது கூட மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறி தெரியாது. 70-க்கு கீழ் குறைந்தால், அதை சிகிச்சை மூலம் 100 ஆக உயர்த்துவது சிரமம். இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க லேசான அறிகுறி இருந்தாலோ, ஆக்சிஜன் அளவு குறைந்தாலோ கரோனா பரிசோதனை செய்யவேண்டும்.

இந்த காலகட்டத்தில் கபசுரக் குடிநீர், யோகா, பிரணாயாமம், வைட்டமின், ஜிங்க் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். மாலை வெயிலில் நிற்பதன் மூலம்வைட்டமின் டி சத்து கிடைக்கும்.இவற்றை செய்வதன் மூலம் கரோனாவால் உயிரிழப்பு தடுக்கப்படும்.

முகக் கவசம், சமூக இடைவெளியால் 10 சதவீதம், அடிக்கடி தொடும்இடங்களை தூய்மை செய்வதன் மூலம் 10 சதவீதம், சோப்புகளால் கை கழுவுவதால் 80 சதவீதம் கரோனா பரவலைத் தடுக்க முடியும்.அதனால் பொது இடங்களில் அதிக அளவில் கை கழுவும் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

கரோனா பரவும்போது மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை கட்டமைப்புகளை தயார் செய்வது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவற்றுக்கு அவகாசம் தேவை. அப்போது முழுஊரடங்கு பயன்தரும். இப்போது முழு ஊரடங்கு பயனளிக்காது. மக்கள் அதிகம் கூடும் விழாக்கள், சுற்றுலா போன்றவற்றை அனுமதிக்காமல் இருந்தாலே, கரோனா நம்மை விட்டு விலகிவிடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இணை இயக்குநர் ஜெ.காமராஜ், புதுச்சேரி அலுவலக உதவி இயக்குநர் தி.சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x