Published : 03 Jul 2020 09:36 PM
Last Updated : 03 Jul 2020 09:36 PM

கழிவுத் தொட்டியில் இறங்கிய நால்வர் உயிரிழப்பு:  பலியானவர்களின்  குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு : திருமாவளவன் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் கழிவு நீர் தொட்டியில் சுத்தம் செய்ய இறங்கியபோது உயிரிழந்த 4 தொழிலாளிகளின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், வேலை வாங்கியவர் கொலைக்குற்றத்தில் கைது செய்யப்பட வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் மனிதக்கழிவுத் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும்போது இராஜா, பாலா, பாண்டி, தினேஷ் ஆகிய 4 தொழிலாளிகள் நச்சுவாயுவில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.

சட்டத்துக்கு எதிராகவும், உச்சநீதிமன்ற ஆணைக்குப் புறம்பாகவும் தொழிலாளிகளை இப்படி மனிதக்கழிவுத் தொட்டியில் இறங்கச் சொல்லிய வீட்டு உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைதுசெய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

கழிவுநீர்/ மனிதக்கழிவு அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. தவிர்க்க இயலாத தேவையினடிப்படையில் அவ்வாறு எவரேனும் ஈடுபடுத்தப்பட்டால் அவர்களுக்கு முகக்கவசம், கையுறை, பாதுகாப்பு பெல்ட் உள்ளிட்ட அனைத்துக் கருவிகளும் வழங்கப்பட வேண்டும்; அருகில் ஒரு ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் இந்த உத்தரவை மாநில அரசுகள் மதிப்பதில்லை. தொடர்ந்தும் இந்தப் பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கருவிகளைக் கொண்டு சுத்தம் செய்வதைவிட மனிதர்களைக்கொண்டு சுத்தம் செய்வது மலிவாக இருக்கின்ற காரணத்தினால் தனிநபர்கள் தொடர்ந்து இந்தப் பணியில் துப்புரவுத் தொழிலாளிகளை ஈடுபடுத்துவது தொடர்கிறது. இத்தகைய அவலம் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமெனில், இவ்வாறு மரணம் நேரும்போது இந்தப் பணியில் ஈடுபடுத்திய நபர்களைக் கொலை வழக்கில் கைது செய்யவேண்டும் .

கழிவுநீர்த் தொட்டி நச்சுவாயுக் கசிவால் உயிரிழக்கும் தொழிலாளிகளின் குடும்பத்துக்கு 10 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2014ம் ஆண்டுத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய சூழலில் அந்தத் தொகை போதுமானதல்ல. எனவே, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து நகர அமைப்புகளுக்கும் கழிவுநீர் அகற்றுவதற்கான கருவிகளைத் தமிழக அரசு உடனடியாக வழங்கவேண்டும். இதற்கு மேல் ஒருவர் கூட இத்தகைய விபத்தில் உயிரிழக்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x