Published : 03 Jul 2020 08:17 PM
Last Updated : 03 Jul 2020 08:17 PM

கரோனாவால் மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பலி: ஸ்டாலின் இரங்கல்

மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் சுகுமாரன் கரோனாவால் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் முன்களப்பணியாளர்களை பாதுக்காக்க அரசு உரிய உபகரணங்களை அளிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் சுகுமாரன் கரோனாவால் உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் அரசு பொது மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வந்த டாக்டர் சுகுமார் அவர்கள் கரோனா தொற்று காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

அவரது மரணத்துக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட முகநூல் பதிவு:

“கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவர் சுகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு மிகவும் வேதனையுற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரின் மரணம்- கரோனா சிகிச்சையில் முன்கள வீரர்களாக இருப்போரைப் பாதுகாப்பதில் அதிமுக ஆட்சி தொடர்ந்து காட்டி வரும் அலட்சியத்தின் அடையாளமாகும்.

அரசின் இதுபோன்ற தோல்விகள், கரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர், செவிலியர் ஆகியோருக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி, நோய்த் தடுப்பில் மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

ஆகவே முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவரின் உயிரையும் பாதுகாத்திட, இனியொரு மரணம் நிகழ்ந்து விடாமல் தடுத்திட, உரிய மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று அதிமுக அரசை வலியுறுத்துகிறேன்.

அரசுத் தலைமை மருத்துவர் சுகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x