

தூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 தொழிலாளர்களின் உடல்களை வாங்க மறுத்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள செக்காரக்குடி வடக்கு தெருவை சேர்ந்த சோமசுந்தரம் வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த இக்கிராஜா (17), பாலா (20), பாண்டி (28) மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த தினேஷ் (20) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் சுத்தம் செய்தனர்.
அப்போது விஷவாயு தாக்கியதில் அவர்கள் 4 பேரும் உயிரிழந்தனர். இது குறித்து தட்டப்பாறை போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்கள். உயிரிழந்த 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்நிலையில் 4 பேரின் உடல்களையும் வாங்க மறுத்து அவர்களது உறவினர்கள் இன்று காலையிலிருந்து மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகளும், போலீஸாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து உடல்களைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் நேற்று மாலையில் ஒப்புக்கொண்டனர்.