

விருதுநகரில் அதிமுக மாவட்டச் செயலர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தற்போது மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரகுக்கு எதிராக கட்சியில் போர்க்கொடி உயர்த்திய நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தமிழக பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருபவர் கே.டி.ராஜேந்திரபாஜி. விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்த இவர், கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர்.
திருத்தங்கல் அதிமுக நகரச் செயலராகவும், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலராகவும் பொறுப்பு வகித்து வந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடந்த 2011ம் ஆண்டு இறுதியில் மாவட்டச் செயலராக பொறுப்பேற்றார்.
கடந்த முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சராகவும், தற்போது பால்வளத்துறை அமைச்சராகவும் கே.டி.ராஜேந்திரபாலஜி பொறுப்பு வகித்து வருகிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர்கள் மா.பா.பாண்டியராஜன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோரை ஓரம்கட்டி தனது செல்பாட்டால் தொடர்ந்து மாவட்ட அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, டி.டி.வி. தினகரன் அணி என பிரிவு ஏற்பட்டபோது கட்சியில் பல்வேறு கட்டுப்பாடுளை விதித்து இபிஎஸ் அணியில் தொடர்ந்து மாவட்டச் செயலராகவும் அமைச்சராகவும் வலம் வந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
கடந்த தேர்தலின்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் பேச்சு சிறுபான்மையின மக்களுக்கு எதிராக இருந்ததும், மூத்த அமைச்சர்களை மதிக்காமல் அரசு மற்றும் அதிமுகவின் கொள்கைகள் குறித்து அடிக்கடி பேட்டி அளித்ததும் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கட்சி மேலிடத்திற்கு தொடர்ந்து பல புகார்களும் சென்றதால் மாவட்டச் செயலர் பொறுப்பிலிருந்து கடந்த மார்ச் 22ம் தேதி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நீக்கப்பட்டார்.
அடுத்த மாவட்டச் செயலர் பொறுப்புக்கு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் பெயரும், முன்னாள் எம்.எல்.ஏ. பாலகங்காதரன் பெயரும் கட்சியினரிடையே அடிபடுகிறது.
அடுத்த ஆண்டில் சட்டமன்றத் தேர்தலும் வரவுள்ளது. இந்நிலையில் மாவட்டச் செயலர் நியமிக்கப்படும் வரை கட்சிப் பணிகளை கவனிப்பதற்காக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாவட்ட பொறுப்பாளராக நியமித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான பழனிசாமியும் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதனால், விருதுநகர் மாவட்டம் 2-க பிரிக்கப்படலாம் என்றும் அதில் ஒன்றில் மாவட்டச் செயலராக மீண்டும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியே நியமிக்கப்படலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதோடு, மாவட்டச் செயலர் பதவி பறிப்புக்குக் காரணமான நிர்வாகிகள் சிலருக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் தங்கள் பதவி பறிக்கப்படும் என்ற கலக்கமும் ஏற்பட்டுள்ளது.