Last Updated : 03 Jul, 2020 06:53 PM

 

Published : 03 Jul 2020 06:53 PM
Last Updated : 03 Jul 2020 06:53 PM

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரிப்பு: மருத்துவர்கள் பற்றாக்குறையால் சிரமம்

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும்நிலையில், மருத்துவர்கள் பற்றாக்குறையால் சிவகங்கை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் புலம்பி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் குறைந்தது 50 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பலர் குணமடைந்தனர். இன்றைய நிலவரப்படி 170 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 208 மருத்துவர்கள் உள்ளனர். அவர்களில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள் மற்றும் இதர பணிகளில் உள்ளவர்களை தவிர்த்து 70 பேர் மட்டுமே சுழற்சி முறையில் கரோனா பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

கரோனா வார்டுகளில் தினமும் 10 முதல் 12 மருத்துவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். நான்கு நாட்கள் கரோனா பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு 7 நாட்கள் ஓய்வு அளிக்கப்படுகிறது.

இதனால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதையடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் புலம்பி வருகின்றனர்.

மருத்துவ நலப்பணிகள் துறை சார்பில் இயங்கும் அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒதுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

3 பேர் பலி:

சிவகங்கை மாவட்டத்தில் கரோனாவால் மூவர் மரணமடைந்தனர். மேலும் இன்று 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
சிவகங்கை மாவட்டத்தில் கரோனாவால் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 328-க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர். தற்போது 170 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் நேற்று சிகிச்சையில் இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது ஆண் மரணமடைந்தார். மேலும் சிவகங்கையைச் சேர்ந்த 62 வயது ஆண் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தனர்.

காரைக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புலியடிதம்பத்தைச் சேர்ந்த 47 வயது நபர் மரணமடைந்தார். அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதேபோல் அவரது தோட்டத்திலும் அடக்கம் செய்யவும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு நீண்டதொலைவில் உள்ள மற்றொரு மயானத்தில் அடக்கம் செய்தனர்.

மேலும் இன்று சிவகங்கை, மானாமதுரை, தமராக்கி, காரைக்குடி, புதுவயல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x