லால்குடியில் 7-வது நாளாகத் தொடரும் விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

விவசாயக் கூலித் தொழிலாளர்கள் போராட்டம்.
விவசாயக் கூலித் தொழிலாளர்கள் போராட்டம்.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் லால்குடி நகர் கிராமத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் 7-வது நாளாக இன்றும் தொடர்ந்தது.

குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும் சாகுபடிப் பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் உள்ள நகர் கிராமத்தில் கூலி உயர்வு கேட்டு நூறுக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் கடந்த 27-ம் தேதி வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.

இது தொடர்பாக நகர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தீர்வு காணப்படவில்லை. இதனால், விவசாயக் கூலித் தொழிலாளர்களின் போராட்டம் 7-வது நாளாக இன்றும் (ஜூலை 3) தொடர்ந்தது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாற்று பறித்தல், நாற்று நடுதல், களை எடுத்தல், பூச்சி மருந்து தெளித்தல், உரம் தெளித்தல் உள்ளிட்ட விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.பழனிசாமி கூறும்போது, "விவசாயத் தொழிலாளர்கள் நியாயமான கூலி உயர்வுதான் கேட்கின்றனர். எனவேதான், இந்த விவகாரத்தில் தீர்வு கிடைக்கும் வரை வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து வருகிறோம். ஆனால், வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர வருவாய்த் துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினோம். இதையடுத்து, லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (ஜூலை 4) பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிடில் போராட்டம் தொடரும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in