

மதுரை தோப்பூர் ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனை வளாகத்தில் தற்காலிகமாக 1,000 படுக்கை வசதி கூடிய தற்காலிக ‘கரோனா’ சிகிச்சை அரங்கு அமைக்கப்பட உள்ளது.
மதுரையில் நாளுக்கு நாள் ‘கரோனா’ தொற்று பரவலும், பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றனர். அவர்களுக்கான சிகிச்சை வசதிகளை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய போராடிக் கொண்டிருக்கிறது.
தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் முழுவதும் நிரம்பியுள்ளநிலையில் வேளாண்மை கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி, ரயில்வே மருத்துவமனை உள்ளிட்ட மற்ற இடங்களில் அமைக்கப்பட்ட ‘கரோனா’ சிறப்பு சிகிச்சை மையங்களிலும் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.
அதுபோல் தனியார் மருத்துவமனைகளிலும் அமைக்கப்பட்ட ‘கரோனா’ வார்டில் நோயாளிகள் கூட்டம் நிரம்பிவிட்டது. தற்போது போல் தினமும் 300 பேர் பாதிப்பு அதிகரித்தால் ஒரிரு நாளில் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு படுக்கை வசதிகள் இருக்காது.
அதனால், மாநகராட்சிப்பகுதியில் நோய் அறிகுறி இல்லாதவர்களை அவர்கள் வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப்பெற மருந்து, மாத்திரைகள் வழங்கி ஆலோசனை வழங்கப்படுகிறது.
இந்த நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தோப்பூர் ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனையில் செயற்கை சுவாச வசதியுடன் கூடிய 200 படுக்கை வசதிகள் தற்போது தயார் செய்யப்படுகிறது.
மேலும், இதே மருத்துவமனை வளாகத்தில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய தற்காலிக அரங்குகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த இடத்தை மதுரை மாவட்ட ‘கரோனா’ தொற்று நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் சந்திரமோகன், மாவட்ட ஆட்சியர் டிஜி.வினய் மற்றும் மருத்துவக்குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
அதுபோல், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் சிறப்பு ‘கரோனா’ வார்டு மையத்தையும் அவர்கள் சென்று பார்வையிட்டனர்.