வேலூர் மாவட்டத்தில் 7-9 நாட்கள் வரை கரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாவதில் தாமதம்; 48 மணி நேரத்துக்குள் அறிவிக்கப்படும்; மாவட்ட ஆட்சியர் உறுதி

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பரிசோதனை முடிவுகள் வெளியாவதில் 7 முதல் 9 நாட்கள் வரை தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. வரும் நாட்களில் 48 மணி நேரத்துக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உறுதியளித்துள்ளார்.

வேலூர் அண்ணா சாலையில் உள்ள பிரபல நகை ஷோரூமில் பணியாற்றும் 3 பேர், அரசு மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவர் என மாவட்டத்தில் இன்று (ஜூலை 3) புதிதாக 96 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,742 ஆக அதிகரித்துள்ளது. 546 பேருக்கான முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளது.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சிஎம்சி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இதில், சிஎம்சி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்துக்குள் வெளியாகிறது. ஆனால், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாவதில் 7 முதல் 9 நாட்கள் வரை தாமதமாவது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் பரிசோதனை மாதிரிகளை கொடுத்த நபர் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாவதாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் நான்கு நாட்களில் முடிவு வரவில்லை என்றால் தங்களுக்கு 'நெகட்டிவ்' என்று நினைத்துக்கொண்டு வழக்கமான பணியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இன்று வெளியான பட்டியலில் இடம் பெற்றிருந்த 25 வயது இளைஞர் ஒருவர் கூறும்போது, "ஜூன் 25-ம் தேதி கரோனா பரிசோதனைக்கான மாதிரி கொடுத்தேன். இரண்டு நாட்கள் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தது. அதன் பிறகு எந்த பாதிப்பும் இல்லாமல் இப்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன். ஆனால், எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இன்று (ஜூலை 3) தெரிவிக்கின்றனர்" என்றார்.

குடியாத்தம் நகரைச் சேர்ந்த 37 வயது நபர் கூறும்போது, "ஜூலை 1-ம் தேதி சிஎம்சி மருத்துவமனையில் பரிசோதனைக்காக மாதிரிகளை கொடுத்தேன். ஜூலை 2-ம் தேதி காலை எனக்கு தொற்று இருப்பதாக மருத்துமவனையில் இருந்து அழைப்பு வந்தது. உடனே அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துவிட்டேன். இன்று வெளியான பட்டியலில் எனது பெயர் உள்ளது" என்றார்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "வேலூர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,500-ஐ கடந்தது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதேநேரம், ஒரே நேரத்தில் அதிகம் பேர் சிகிச்சைக்காக வந்ததால் அவர்களுக்கும் நான்கு நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை நடத்த வேண்டியிருந்தது. அதன் முடிவுகளும் அளிக்க வேண்டியது இருந்ததால் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது" என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் தொடர்புகொண்டு கேட்டதற்கு, "தமிழகத்தில் அதிக மாதிரிகளை பரிசோதிக்கும் மாவட்டமாக வேலூர் இருக்கிறது. ஜூலை 2-ம் தேதி நிலவரப்படி 29 ஆயிரத்து 954 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை மாதிரிகளை இரண்டு வகையில் மேற்கொள்ள வேண்டும். ஐசிஎம்ஆர் விதிகளின்படி குறிப்பிட்ட எண்கள் வரையிலான மாதிரிகள் 'பாசிட்டிவ்' என்று வந்தால் அதை மறுபடியும் பரிசோதிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 600-700 பேருக்கு பரிசோதனை செய்கிறோம். வரும் நாட்களில் அதிகபட்சமாக 48 மணி நேரத்துக்குள் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும். பரிசோதனைக்காக மாதிரிகளை கொடுத்தவர்கள் முடிவு வரும் வரை வெளியில் நடமாடாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in