

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசின் உதவித்தொகையான ரூ.9 லட்சத்து 12 ஆயிரத்து 500க்கான காசோலை வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமியை சமீபத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்ற சாமுவேல் (27) பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இதையடுத்து காவல்துறையினர் ராஜாவைக் கைது செய்தனர்.
சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், புதுக்கோட்டை மற்றும் ஏம்பலில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், சிறுமியின் குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால் மட்டுமே சிறுமியின் சடலத்தை வாங்குவோம் எனக்கூறி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டியிருந்த சிறுமியின் உடலை நேற்று (ஜூலை 2) உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.
அதன் பிறகு, இந்தக் கோரிக்கையை தமிழக முதல்வர் பழனிசாமியின் கவனத்துக்கு ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி உடனே கொண்டு சென்றதைத் தொடர்ந்து, பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
அதன்பிறகு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் வழங்கப்படும் தீருதவித் தொகையான ரூ.8.25 லட்சத்தில் முதல் கட்டமாக ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500 வழங்கப்படும் எனவும் மீதித்தொகை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபிறகு வழங்கப்படும் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த சிறுமியின் சடலத்தை உறவினர்கள் இன்று (ஜூலை 3) பெற்றுச் சென்றனர். அப்போது, மருத்துவமனை வளாகத்தில் சிறுமியின் உடலுக்கு ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், சிறுமியின் குடும்பத்தினரிடம் அரசின் உதவித்தொகையான ரூ.9 லட்சத்து 12 ஆயிரத்து 500-க்கான காசோலையை வழங்கினார். அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.வி.அருண்சக்திகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி, "சிறுமியின் குடும்பத்துக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் அரசின் பசுமை வீடு வழங்கப்படும். மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம்" என்றார்.