

டாஸ்மாக் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், இன்று நிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
கரோனா காலத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மனு கடந்த மே 15-ம் தேதி விசாரிக்கப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
மேலும், மதுபான விற்பனை மற்றும் விநியோகத்தை முறைப்படுத்துதல் தொடர்பாக தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தில் ஆன்லைனில் மதுபான விற்பனை மற்றும் விநியோகம் தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை, பாதுகாப்பு, சமூக இடைவெளி உள்ளிட்டவை அடங்கிய நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நிலை அறிக்கை அடங்கிய பதில் மனுவைத் தாக்கல் செய்தது,
தமிழக அரசு தாக்கல் செய்த நிலை அறிக்கை பதில் மனு:
* தமிழகத்தில் மது விற்பனையின்போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
* டாஸ்மாக்கில் டோக்கன் முறை மூலமே மது விற்கப்படுகிறது.
* சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. அதைக் காவல்துறை கண்காணித்து வருகிறது.
* தடுப்புகள் வைத்துக் கூட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது.
* 5,338 டாஸ்மாக் கடைகளில் 4,512 கடைகளே திறக்கப்பட்டுள்ளன.
* 850 டாஸ்மாக் கடைகளில் ஸ்வைப் மெஷின் மூலம் பணம் பெறப்படுகிறது.
* ஸ்வைப் மெஷின் மூலம் பணம் செலுத்தும் முறையை அனைத்துக் கடைகளுக்கும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,
* டாஸ்மாக்கில் பணிபுரிபவர்களுக்கு கையுறை, முகக்கவசம், சானிடைசர் வழங்கப்பட்டுள்ளது.
* டாஸ்மாக் கடைகளில் தொடர்ச்சியாக சுகாதாரம் கடைப்பிடிக்கபப்டுகிறது.
* மத்திய அரசு கொடுத்த வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில்தான் மது விற்பனை நடக்கிறது.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.