

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து இரு வாரமாகியும், இதுவரை பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வராததைக் கண்டித்து கும்பகோணத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாசன வாய்க்காலில் இறங்கி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறுவை சாகுபடிக்கு கடந்த 16-ம் தேதி கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கும்பகோணம் நகரில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் காவிரிக் கரையிலிருந்து பிரிந்து செல்லும் திருப்புவனம் பாசன வாய்க்காலில் இதுநாள் வரை பாசன நீர் செல்லவில்லை.
கல்லணை திறந்து இரண்டு வாரங்கள் கடந்தும் கும்பகோணம் நகரத்தில் உள்ள நீர்நிலைகள், வாய்க்கால்கள் மற்றும் குளங்களில் நீர் சென்று சேரவில்லை. நகரில் உள்ள எந்தக் குளமும் இதுவரை நிரம்பவில்லை. நிலத்தடி நீர்மட்டம் உயரவும், பாசனத்துக்குப் பயன்படாத காவிரி நீர் நேராகக் கடலில் செல்லும் அபாய நிலை உள்ளது.
கும்பகோணம் நகரத்தில் உள்ள நீர்வழிப் பாதைகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி நீர் தடையின்றிச் செல்லவும், நீலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதேபோல் தேப்பெருமாநல்லூர் பாசன வாய்க்கால், உள்ளூர் பாசன வாய்க்கால், பழவாத்தாங்கட்டளை பாசன வாய்க்கால், பெருமாண்டி பாசன வாய்க்கால்களிலும் இதுவரை பாசன நீர் செல்லவில்லை. பாசன வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை.
இந்நிலையில், காவிரியில் தண்ணீர் வந்து இரண்டு வாரங்கள் கடந்தும் பாசன நீர் வாய்க்கால்களில் தண்ணீர் ஏறாத காரணத்தினால் திருப்புவனம் பாசன வாய்க்கால், தேப்பெருமாநல்லூர் பாசன வாய்க்கால், உள்ளூர் பாசன வாய்க்கால், பழவாத்தாங்கட்டளை பாசன வாய்க்கால், பெருமாண்டி பாசன வாய்க்கால் முலம் பாசன வசதி பெறும் சுமார் 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன எனக் கூறி, வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஆர்.மதியழகன் தலைமையில் இன்று (ஜூலை 3) கும்பகோணம் நகரம், பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் காவிரிக் கரையில் உள்ள திருப்புவனம் பாசன வாய்க்காலில் இறங்கிப் போராட்டம் நடைபெற்றது.