Published : 03 Jul 2020 01:08 PM
Last Updated : 03 Jul 2020 01:08 PM

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அறிவித்த ரூ.1000 நிவாரணம்; வீடுகளுக்கே சென்று வழங்கக் கோரிக்கை

ஆர்.எஸ்.ராஜன்

கன்னியாகுமரி

அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது தமிழக அரசு. இதை மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க அரசு பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஓர் அங்கமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் கட்டமாக 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. தொழிலாளர் நல வாரியங்களின் மூலமும் உதவித்தொகை வழங்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. இதேபோல், தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளுக்கும் மாதந்தோறும் தலா 1000 ரூபாய் உதவித்தொகை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு தாலுகா வாரியாக விஏஓ அலுவலகங்களில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாற்றுத்திறனாளிகள் விஏஓ அலுவலகத்துக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. இதற்கு மாற்றாக அவர்களுக்கு வீடுகளிலேயே சென்று நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற துணைச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் ‘இந்து தமிழ்’ இணையத்திடம் கூறுகையில், “தமிழகத்தில் லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கு இந்த நேரத்தில் அரசு உதவித்தொகை வழங்குவதை வரவேற்கிறோம். அதேநேரம் தவழ்ந்து செல்லும் நிலையிலும், மற்றொருவரின் துணையுடன் மட்டுமே வெளியில் வரமுடியும் என்ற நிலையிலும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்கள் இதற்காக மிகவும் சிரமப்பட்டு வரவேண்டியுள்ளது.

அதேபோல் அரசியல்வாதிகள் இவர்களை விஏஓ அலுவலகங்களில் திரட்டி வைத்துக்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்குக் காத்து நிற்க வைக்கும் அபாயமும் இருக்கிறது. அரசு முதியோர்களையும், தீவிர நோய்கள் இருப்பவர்களையும் வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள் என்று ஒருபக்கம் அறிவுறுத்துகிறது. இன்னொரு புறத்தில் இயல்பாகவே தங்கள் உடல் குறைபாடுகளால் அவதிப்படுபவர்களை விஏஓ அலுவலகத்துக்கு அழைப்பது சரியானதா? மற்றவர்கள் துணையின்றி நிற்கவோ, நடக்கவோ முடியாத மாற்றுத்திறனாளிகளும், பார்வையற்றவர்களும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது சாத்தியமா? அவர்களை வீட்டை விட்டு வெளியே வரச்செய்து நோய் தொற்றினால் யார் பொறுப்பேற்பது?

ரேஷன் கார்டுகளில் விலையில்லாப் பொருள்களுக்கு ரேஷன் கடைப் பணியாளர்கள், வீட்டுக்கு வீடு சென்று டோக்கன்களை விநியோகித்தனர். இது அதைவிட சிக்கல் இல்லாத விஷயம். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு பகுதியிலும் இருபதில் இருந்து ஐம்பது பேர்வரைதான் மாற்றுத்திறனாளிகள் இருப்பார்கள். அவர்களின் வீடுகளுக்கே போய் அந்தத் தொகையை வழங்குவது கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கவும் வழிவகுக்கும். அரசு இதையெல்லாம் கவனத்தில் கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கே சென்று நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x