

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் பி.சாமுண்டீஸ்வரி. இவர்பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய காஞ்சிபுரம் சரகத்துக்கு டிஐஜியாக நேற்று பொறுப்பேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ரவுடிகளை ஒடுக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். சாராய வியாபாரம், தொடர் கொலை, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மட்டுமே குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு வந்தனர்.
இப்போது பெண் குழந்தைகள் சார்ந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டு போக்ஸோ சட்டத்தின்கீழ் கைதாகும் நபர்களையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மணல் கடத்தல், ரவுடிகள் மற்றும் பொதுப் பிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவிக்க டிஐஜி அலுவலகத்தில் ஒருகட்டுப்பாட்டு அறை செயல்படும். 7397001493, 7397001398 ஆகிய எண்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம். இந்த எண்களில் வாட்ஸ்-அப் மூலமும் தகவல் அளிக்கலாம். இந்த எண்ணில் வரும் புகார்கள் நேரடியாக எனது கவனத்துக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தச் சந்திப்பின்போது தனிப்பிரிவு ஆய்வாளர் சவுந்திரராஜன் உடன் இருந்தார்.