

வெளிநாடுகளில் சிக்கியுள்ள 27,956 தமிழர்களை அழைத்து வருவதற்கு என்ன திட்டம் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள், சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஏதுவாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி திமுக மூத்த தலைவரும், எம்.பி.யுமான டிகேஎஸ் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதே கோரிக்கையுடன் ராஜா முகமது என்பவரும் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 47,000 பயணிகளில், 13429 பேர் மட்டும் தமிழகம் அழைத்து வரப்பட்டனர். இன்னும் 27,956 பேரை அழைத்து வர வேண்டியுள்ளது. அதற்கு 158 விமானங்கள் இயக்கப்பட வேண்டியுள்ளன. ஆனால், விமானங்கள் தரையிறங்க மாநில அரசு ஒப்புதல் வழங்கவில்லை.
கடந்த மே 15-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 79 விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்ட்டர்ட் விமானங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. வெளிநாடுகளில் இந்தியக் குடிமக்கள், சாலைகளிலும், பூங்காக்களிலும் தூங்குகின்றனர் நிலை உள்ளது” எனத் தெரிவித்தார்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், “தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்பது தவறு. ஒரு நாளைக்கு 7 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதில் வருபவர்களைத் தனிமைப்படுத்த வேண்டியுள்ளது. கூடுதல் விமானங்கள் இயக்க மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், “வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களுக்கு, அங்குள்ள இந்தியத் தூதரகங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளன. சிக்கித் தவிப்பவர்களை மீட்பது குறித்து மத்திய அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கிறேன். அதன் மூலம் தீர்வு காண முடியும்” எனக் கூறி அவகாசம் வழங்கக் கோரினார்.
இக்கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையைத் திங்கட்கிழமைக்குக் தள்ளிவைத்தனர்.
அன்றைய தினம், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 27,956 தமிழர்களை அழைத்து வர என்ன திட்டம் உள்ளது என்பது குறித்தும், நேர்மறையான தீர்வை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.