

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் மண் அள்ளுவதற்கு எதிரப்பு தெரிவித்து கிராமமக்கள் பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்தனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து காரைக்குடிக்கு நான்குவழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக கிராவல் மண் விநியோகிக்கும் தனியார் நிறுவனம் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள கண்மாய் நீர்ப்பிடிப்புகளில் மண் அள்ளி வருகிறது.
ஆனால் அந்த நிறுவனம் அனுமதி பெற்றதை விட கூடுதலாக மண் அள்ளி வருகிறது.
ஏற்கெனவே வேலினிப்பட்டி கண்மாயில் விதிமுறையை மீறி அதிக ஆழத்தில் மண் அள்ளப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியநிலையில், தற்போது சிராவயல் அருகே செட்டிக் கண்மாயில் கிராவல் மண் அள்ளுவதற்காக தனியார் நிறுவனம் சார்பில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்தனர். இதையடுத்து மண் அள்ளும் பணி நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், ‘ தனியார் நிறுவனம் பல இடங்களில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளியுள்ளது.
தற்போது செட்டிக்கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் மண் அள்ள உள்ளது. இக்கண்மாய் மூலம் 150 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. அளவுக்கு அதிகமாக மண் அள்ளினால் கண்மாய்க்கு நீர் வரத்து பாதிக்கப்படும். இதனால் மண் அள்ள கூடாது, என்று கூறினர்.