

சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறையினரைக் கைது செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கவும் அரசு முயற்சிக்க வேண்டும் எனத் தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கழகத்தின் மாநிலத் தலைவர் ராஜேஷ் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
’’சாத்தான்குளத்தில் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும், மகனும் சித்திரவதை செய்யப்பட்டு மிருகத்தனமாகக் கொல்லப்பட்டனர். இதைப் பல்வேறு தரப்பினரும் கண்டித்த நிலையில், அதே காவல் நிலையத்தில் நீதிபதி கண் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அதிர்ச்சி அளிக்கிறது. இக்கொடிய சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.
ஒரு சில காவலர்கள் இதுபோன்று நடந்து கொள்வது, ஒட்டுமொத்தக் காவல்துறையின் மீதும் நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. இந்தச் சம்பவத்தில், தொடர்புடைய காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது மட்டுமே தீர்வாக ஆகிவிடாது. அவர்கள் சட்டத்தின் மூலம் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்’’.
இவ்வாறு ராஜேஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.