

மதுரையில் இன்று 273 பேருக்கு ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது.
மதுரையில் தினமும் சராசரியாக 250 முதல் 300 பேருக்கு வரை இந்த தொற்று நோய் உறுதி செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்று சென்னைக்கு அடுத்து மதுரையில்தான் பாதிப்பு அதிகமாக உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 273 பேருக்கு இந்த தொற்று நோய் உறுதி செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,133 பேராக உயர்ந்தது. நேற்று 4 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இவர்களோடு உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது சென்னையிலும், மதுரையிலும் மட்டுமே பாதிப்பு குறையாமல் பரவல் அதிகமாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் முந்தைய நாட்களை விட தற்போது குறையத்தொடங்கியுள்ளது.
தற்போது தமிழக அளவில் பாதிப்பு பட்டியலில் மதுரை சென்னைக்கு அடுத்து 4-வது இடத்திற்கு முன்னேறியது. மதுரையில் கடந்த மாதம் ஜூன் 23-ம் தேதி வரை 988 பேர் மட்டுமே இந்த தொற்றுநோய்க்கு பாதிக்கப்பட்டிருந்தனர்.
9 நாட்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை இன்று கடந்துள்ளது. மதுரையில் பாதிக்கப்படுவோரில் 80 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் தெரிவதில்லை.
அதனால், அறிகுறி இல்லாதவர்களை இனி அவர்கள் வீடுகளிலே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக டெலிமெடிசன் திட்டத்தை இன்று தொடங்கியது.
இந்நிலையில் ‘கரோனா’ நோயாளிகளுக்கான சிகிச்சை முறையிலும் தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாதவர்கள் ‘கரோனா’ சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு அதிகப்பட்சம் 5 முதல் 7 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்து விடுகின்றனர்.
இவர்களுக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது மீண்டும் ‘கரோனா’ பரிசோதனை செய்து தொற்று இருக்கிறதா? இல்லையா? என்று உறுதி செய்யப்படுவதில்லை. அதனால், இந்த தொற்று நோயின் பாதிப்பு வேகம் அதிகமாக இருந்தாலும் அதிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.