

திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த ஆலோசனைகள் அரசால் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளது, அவர் செய்யும் விமர்சனம், ஆலோசனை எதுவானாலும் ஊக்கப்படுத்தும் விதத்தில் இருக்கவேண்டும், ஆனால் காயப்படுத்தும் விதத்தில் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:
அரசு தொடர் நடவடிக்கைகளாக கரோனா தடுப்பு நடவடிக்கை, பாதிப்படைந்தவர்களை குணப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை நல்ல முறையில் செய்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 56,021 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதுவரை 98 ஆயிரத்து 392 நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருந்தாலும் 42000 பேர் மட்டுமே இப்போது சிகிச்சையில் உள்ளனர். அவர்கள் சிகிச்சையில் இருந்தாலும், கேர் சென்டரில், வீட்டுத்தனிமையில் இருந்தாலும் நம்பிக்கை அளிக்கக்கூடிய நடவடிக்கைகளை அரசு செய்து வருகிறது.
நோய் அறிகுறி, அறிகுறி இல்லாமல் தொற்றுடன் உள்ளவர்களையும் அரசு ஒரே மாதிரியான கனிவோடு பார்த்து தேவையான உதவிகளை செய்து வருகிறது. ஒருவேளை அறிகுறி இல்லாதவரை கண்டுபிடித்து தனிமைப்படுத்துவதன் மூலம் அவர் மூலம் நோய்ப்பரவலை தடுக்கிறோம். அறிகுறியோடு வருபவர்களை கண்டறிந்து உரிய உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கிறோம்.
இணை நோய், நீண்ட கால நோயுடன் உள்ளவர்கள், முதியவர்கள் கரோனா தொற்றால் ஆளானால் அது மருத்துவர்களுக்கு சவாலாக இருந்தாலும் அவர்களை காக்கும் வேலையிலும் அரசு ஈடுபட்டு வருகிறது. நாட்டிலேயே 75000 படுக்கை வசதிகள், சென்னையில் 17500 படுக்கை வசதிகள் உள்ளன. முதன்முறையாக பிரத்யோகமான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய அதி நவீன உபகரணங்களை கொண்ட 750 படுக்கைகளை கொண்ட மருத்துவமனையை கிண்டியில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஓரிரு நாளில் திறக்க உள்ளார்.
12 லட்சத்து 35 ஆயிரத்து 692 பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். நாட்டிலேயே அதிகமான டெஸ்ட் எடுத்துள்ளோம். மகாராஷ்டிராவில் 9 லட்சத்து 95 ஆயிரம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 2 லட்சத்து 39 ஆயிரம், கர்நாடகாவில் 6 லட்சத்து 37 ஆயிரம் சோதனைகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக சோதனைகள் செய்தது மட்டுமல்ல மேலும் 10 லட்சம் கிட் வாங்க முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். 93 சதவித டெஸ்ட் கிட்களை மாநில நிதியிலிருந்து வாங்க முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் வீடு திரும்புவோர் எண்ணிக்கை 57 சதவீதம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். முன் கள வீரர்களாக பணியாற்றும் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு மருந்துகள், அனைத்து வழிமுறைகளையும் அளித்து வருகிறோம்.
எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் சில யோசனைகளை அரசுக்கு பட்டியலிட்டுள்ளார். அதில் நியாய விலைக்கடை மூலமாக இலவச முகக்கவசம் ஒரு யோசனை. இந்த யோசனை ஏற்கெனவே அரசு செய்து வருகிறது. சென்னை மாநகராட்சியில் 46 லட்சம் முகக்கவசங்கள் திரும்ப உபயோகப்படுத்தப்படும் முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது.
முன் கள மருத்துவர்களுக்கு பாதுகாப்புக்காக அனைத்து உபகரணங்களை வழங்க வேண்டும் என்கிற யோசனை, அனைவருக்கும் அது வழங்கப்பட்டுள்ளது. அடுத்து முன் கள பணியாளர் அனைவருக்கும் நிதியை வழங்க வேண்டும் என்கிற யோசனை. அதுவும் சட்டப்பேரவை நடந்த போதே முதல்வர் ஒருமாத ஊதியம் கூடுதலாக வழங்கப்படுவதாக அறிவித்த ஒன்று. அது தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
அடுத்து சோதனை குறித்த விபரங்கள் மருத்துவமனை வாரியாக தரவேண்டும். விமானம் மூலம் வெளிநாடு, உள் நாடு, கப்பல் மூலமாக வருபவர் என அனைத்து சோதனை பாஸிட்டிவ் விபரங்கள், மாவட்ட வாரியான சோதனை குறித்த விபரங்கள் அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் வெளிவரும் பிரபல ஆங்கில ஏடு இந்தியாவில் அனைத்து புள்ளி விபரங்களை தெளிவாக வெளியிடும் மாநிலம் என முதலிடத்தில் தமிழகத்தை சுட்டிக்காட்டியுள்ளது. இன்று மத்திய யூனியன் அமைச்சகம் அமைச்சரவை செயலர் தமிழகத்தை பின்பற்ற வேண்டும் தெரிவித்துள்ளது நமக்கு கிடைத்துள்ள அங்கிகாரம்..
ஸ்டாலின் கேட்டுள்ள அடுத்த கேள்வியாக தமிழகத்தில் சமூக பரவல் உள்ளதா? இல்லையா எனக்கேட்டுள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை சமூக பரவல் இல்லை. அதை ஐசி எம் ஆர் தான் ஆய்வு செய்து சொல்லவேண்டும். ஆனால் ஐசிஎம்ஆர் இல்லை எனச் தெரிவித்துள்ளது என்பதே உண்மை.
சோதனையில் தொற்று உறுதியானவர்களை தனிமைப்படுத்தி அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை சோதனைக்குட்படுத்தி தனிமைப்படுத்தும் வேலையை செய்து வருகிறோம். வளர்ந்த நாடுகளே படுக்கை வசதி இல்லை என திணறி வரும் வேளையில் தமிழகத்தில் மட்டுமே ஒரு நாளைக்கு 500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம் நடத்தி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தினம் சோதனை நடத்துகிறோம்..
களத்தில் வந்து பாருங்கள் 100 நாட்களுக்கு மேலாக களப்பணியாளர்கள், உயர் ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், காவல்துறையினர் உயிரைத் துச்சமென மதித்து பணியாற்றுகிறார்கள். இப்படி பணியாற்றும்போது ஒரு அறிக்கை மூலமாக குறைச் சொல்வது களத்தில் நின்று பணியாற்றும் எங்களை காயப்படுத்துவதாக அமையும்.
இந்தச் சூழலில் அறிக்கை அவர்களை ஊக்கப்படுத்துவதாக இருக்க வேண்டும். உங்கள் கருத்துகள், ஆலோசனைகள் அனைத்தும் அவ்வழியில் அமைய வேண்டும். உயிர் காக்கும் உயிரியல் ஊசி மருந்துகளை வைரல் வேகத்தை கட்டுப்படுத்தும் 20,000 ஊசி மருந்துகளில் 10 ஆயிரம் மருந்துகளை தமிழக அரசு பெற்றுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இருப்பை வைத்துள்ளது.
ரத்தம் உறைதலை தடுக்கும் மருந்து 1 லட்சத்து 50000 மருந்துகள் என உயிர் காக்கும் 3 முக்கிய மருந்துகளை இருப்பு வைத்துள்ளோம். ஆகவே பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம், பயம் வேண்டாம் என அன்பாக கேட்டுக்கொள்கிறேன். தொற்றே வந்தாலும் பயம் வேண்டாம். உங்களை காக்க அரசு இருக்கிறது. ஆனால் மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
கூடுதலாக 14,814 பேர் பணி நியமனம் செய்துள்ளோம். பன்முக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். பாரம்பரிய மருத்துகளை மேற்கொண்டுள்ளோம், பிளாஸ்மா சிகிச்சை மற்றும் வாக்ஸின் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியும் சென்றுக்கொண்டிருக்கிறது. ஒருங்கிணைந்த சிகிச்சையும் அனைத்து அரசு தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து செயலாற்றுகிறோம். சிகிச்சைக்காக முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் நிதி வசூலிக்கப்படுகிறது, உச்சபட்ச கட்டணத்தையும் நிர்ணயித்துள்ளோம்.
யாராக இருந்தாலும் களத்தில் வந்து பாருங்கள், எவ்வளவு சிறப்பான ஏற்பாடுகள், களப்பணிகள்,சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது என்பதை பாருங்கள்”.
இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.