சாத்தான்குளம் பெண் தலைமை காவலருக்கு வாட்ஸ் அப் காலில் பேசி நம்பிக்கை ஊட்டிய நீதிபதிகள்

சாத்தான்குளம் பெண் தலைமை காவலருக்கு வாட்ஸ் அப் காலில் பேசி நம்பிக்கை ஊட்டிய நீதிபதிகள்
Updated on
2 min read

கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த வழக்கில் கோவில்பட்டி நீதித்துறை நடுவரிடம் அச்சமின்றி சாட்சியளித்த சாத்தான்குளம் பெண் தலைமைக் காவலர் ரேவதியிடம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேரடியாக போனில் பேசி நம்பிக்கை ஊட்டினர்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். சாத்தான்குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர்.

இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியது. அடுத்த 24 மணி நேரத்தில் சிபிசிஐடி போலீஸார் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், முருகன் ஆகியோர் கைதும் செய்தனர்.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற கிளை உத்தரவுபடி கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் சாத்தான்குளம் கவால் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரித்தார். அப்போது அங்கிருந்த ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உள்ளிட்ட போலீஸார் நீதித்துறை நடுவரை மரியாதைக்குறைவாக நடத்தியுள்ளனர்.

கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமலும், ஆவணங்களை வழங்காமல் இழுத்தடித்தும் போலீஸார் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியதாகவும், உடல் வலிமையை காட்டி மிரட்டியதாகவும் நீதித்துறை நடுவர் உயர் நீதிமன்றக் கிளை பதிவாளருக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியிருந்தார்.

நீதித்துறை நடுவரிடம் சாத்தான்குளம் காவல் நிலைய பெண் தலைமை காவலர் ரேவதி மட்டும் துனிச்சலுடன் சாட்சியளித்துள்ளார். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸார் விடிய விடிய லத்தியால் அடித்தாகவும், போலீஸாரின் லத்திக்கள் மற்றும் மேஜையில் ரத்தக்கறை படிந்திருந்ததாகவும் அப்போது ரேவதி தெரிவித்தார்.

மேலும், போலீஸாருக்கு எதிராக சாட்சியம் அளித்ததால் தனக்கு ஆபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. எனவே பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதித்துறை நடுவரிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கில் ரேவதியின் சாட்சியம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்கு பதிந்து போலீஸாரை கைது செய்ய ரேவதியின் சாட்சியமும் முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் உயர் நீதிமன்ற கிளையில் இன்று சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ரேவதிக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பும், பாதுகாப்பும் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து சாத்தான்குளம் அருகேயுள்ள அறிவான்மொழி கிராமத்தில் உள்ள ரேவதியின் வீட்டுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின் போது யாரும் எதிர்பாராத வகையில் ரேவதியுடன் நீதிபதிகள் வாட்ஸ்அப் காலில் பேசினர். அப்போது அவருக்கு பாராட்டு தெரிவித்தும், தைரியம் மற்றும் நம்பிக்கையை ஊட்டும் வகையிலும் நீதிபதிகள் பேசினர்.

நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் வழக்கில் தைரியமாக சாட்சியளித்த பெண் தலைமை காவலருடன் நீதிபதிகள் போனில் தைரியம் ஊட்டிய நிகழ்வு முக்கியமானதாக கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in