முழு ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமைகளில் பயணம் செய்யலாமா?- தெளிவான அறிவிப்பு இல்லாததால் பொதுமக்கள் குழப்பம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஜூலை மாதத்தில் வரும் நான்கு ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது தமிழக அரசு. இந்த நாட்களில் இ -பாஸ் பெற்று வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள முடியுமா என்பது குறித்துத் தெளிவான அறிவிப்புகள் இல்லாததால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது.

கரோனாவை முன்னிட்டு ஜூலை 15-ம் தேதி வரை பொதுப் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டுள்ளது. மண்டலம் விட்டு மண்டலம் பயணம் செய்ய இ- பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில் திருமணம், இறப்பு, மருத்துவக் காரணங்கள், வெளியூர்களுக்குச் சென்று சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவிப்பவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இ- பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு நிறுவனங்களின் சார்பில் இ- பாஸ் கோரப்பட்டால் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜூலை மாதத்தில் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் பயணம் செய்யலாமா, அவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுமா என்பது குறித்த தெளிவான அறிவிப்புகள் இல்லாததால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதுகுறித்து சென்னையில் பணி செய்யும் நாகர்கோவிலைச் சேர்ந்த காந்தி ’இந்து தமிழ்’ இணையத்திடம் கூறுகையில், “நான் சென்னையில் பணி செய்கிறேன். எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானம் செல்கிறது. திங்கட்கிழமை பணிக்குத் திரும்ப வசதியாக ஞாயிற்றுக்கிழமை இங்கிருந்து கிளம்பினால் போதுமானது.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை அன்று நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு கார் சவாரிக்கு அழைத்தால் டிராவல்ஸ் நிறுவனங்களே தயக்கம் காட்டுகின்றன. அன்று முழு ஊரடங்கு என்பதால் இ- பாஸ் கிடைக்குமா என்பதும் சந்தேகமாக இருந்தது. இது தொடர்பாக அரசு அறிவித்துள்ள இலவச அழைப்பு எண்ணுக்கும் தொடர்பு கொண்டு பேசினேன். அங்கிருப்பவர்களுக்கும் அதுகுறித்த விவரம் சரிவரத் தெரியவில்லை. ‘நீங்கள் இ - பாஸுக்கு விண்ணப்பியுங்கள். அனுமதி கிடைத்தால் செல்லுங்கள்’ எனச் சொல்கிறார்கள். நேரில் போய் விசாரித்தபோதும் அதிகாரிகளுக்கு அதுகுறித்துத் தெரியவில்லை.

அதேநேரம் ஞாயிற்றுக்கிழமை விமான டிக்கெட்டுடன் இ -பாஸ் விண்ணப்பித்தால் சென்னை மாநகராட்சி உடனே அனுமதி தருகிறது. ஆனால், மாவட்டங்களில் இ - பாஸ் கொடுத்து வெளியூர்ப் பயணங்களுக்கு அனுமதிப்பது குறித்துத் தெரியவில்லை. இதனாலேயே கார் ஓட்டுநர்களும் சவாரி எடுக்கத் தயக்கம் காட்டுகின்றனர். அரசு இதுகுறித்து முறையாக அரசு அதிகாரிகள் மட்டத்தில் தெளிவுபடுத்தினால் வசதியாக இருக்கும். இந்தக் குழப்பத்தால், நான் ஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக சனிக்கிழமை அன்றே விமான டிக்கெட் எடுத்து இ-பாஸ் பெற்றுவிட்டேன்” என்றார்.

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணம் செய்யலாமா கூடாதா என்பது குறித்து அரசே தெளிவான அறிவிப்பை வெளியிட்டால் மக்கள் குழப்பமின்றித் தங்களது பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்வார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in