Published : 02 Jul 2020 05:57 PM
Last Updated : 02 Jul 2020 05:57 PM

இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை: முதல்வர் பழனிசாமி உத்தரவு

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 2) வெளியிட்ட அறிக்கை:

"சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நன்மதிப்பையும், சமத்துவத்தையும் அடைவதை உறுதி செய்வது சட்டம். இப்படிப்பட்ட சட்டத்தை நிலைநாட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் வழக்கறிஞர்கள்.

வழக்கறிஞர்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட அரசு, இந்த அரசு. வழக்கறிஞர்களின் நலன் கருதி, இறந்த வழக்கறிஞர்களின் வாரிசுகளுக்கு நல உதவி வழங்கிடும் திட்டத்தை முதன்முதலில் எம்ஜிஆர் 1987-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி வழங்கப்பட்டு வந்த நிதி உதவித்தொகையை 2 லட்சம் ரூபாயிலிருந்து 5.25 லட்சம் ரூபாயாக ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு முதல் உயர்த்தி வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து கடந்த 30.1.2018 அன்று, இந்நலநிதியை 5.25 லட்சம் ரூபாயிலிருந்து 7 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க நான் உத்தரவிட்டேன்.

சட்டப்படிப்பினை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலில் நிரந்தரப் பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழுமத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னர் இவர்கள் இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டுகாலம் பயிற்சி பெற வேண்டும். கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், சட்டப்படிப்பினை முடித்து விட்டு அவர்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது.

இக்காலகட்டத்தில் பல வழக்கறிஞர்கள் மிகவும் வறுமையான நிலையில் உள்ளதோடு, ஒரு சிலர் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்திக்கொள்ள இயலாமல் வேறு மாற்றுத்தொழிலுக்குச் சென்று விடும் நிலையும் உள்ளது.

இதுபோன்று தற்போது வறுமையில் இருக்கும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் ஒரு சிறப்பான திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த உள்ளது. இதன்படி, இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x