

சாத்தான்குளம் சம்பவம் போல் தமிழகத்தில் இனிமேல் ஒரு நிகழ்வும் நடைபெறக்கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடிப்பது இயல்புக்கு மாறானது.
அதற்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்தால் மட்டுமே இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க முடியும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி. புகழேந்தி அமர்வில் நேற்று வீடியோ கான்பரன்ஸ் முறையில் விசாரிக்கப்பட்டது.
சிபிசிஐடி தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடுகையில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.
கூடுதல் காவல்துறை தலைவர் தாமரைக்கண்ணன் காணொலி வழியாக ஆஜராகி, காவல்துறையினரின் நலத்தை மேம்படுத்த ரூ.100 கோடி மதிப்பில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்க மாவட்ட அளவில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு காவலரின் தனிப்பட்ட மன அழுத்த அளவும் கண்காணிக்கப்பட்டு மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.
தொடர்ந்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடுகையில், தமிழக காவல்துறையில் 1.2 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் இதுவரை 90 ஆயிரம் பேருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
நிமான்ஸ் மருத்துவமனை சார்பில் சேகர் கூறுகையில், வெவ்வேறு அறிவியல் சோதனை முடிவுகளின் அடிப்படையில் காவல்துறையினரின் மன அழுத்தம் கணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் போலீஸார் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக 10.6 சதவீதம் பேர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்ட்டுள்ளனர். இவர்களில் 3 சதவீதம் பேர் தீவிர மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் 42 மனநல மருத்துவமனைகளும், அவற்றில் 25000 படுக்கைகள், 10 ஆயிரம் ஆற்றுப்படுத்துனர்கள் மட்டுமே உள்ளனர் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், காவல்துறையினரின் மன அழுத்தம் குறைந்து, அனைவரும் இயல்பு மனநிலைக்கு வரும் வரை ஆற்றுப்படுத்தல் (கவுன்சலிங்) நடவடிக்கையை முறையாக தெடார வேண்டும். கரோனா முடிவுக்கு வரும் முன்பே போலீஸார் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் நிலையில், கரோனாவுக்கு பின்பு நிலைமை மோசமாக இருக்கும்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை எதற்காக அடிக்கிறான்? இவ்வாறு நடந்து கொள்வது இயல்புக்கு மாறானது. அதற்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்ய வேண்டும். அப்போதுதான் இது போன்ற நிகழ்வு தடுக்கப்படும். தமிழகத்தில் இது போன்ற நிகழ்வு இனிமேல் நடக்க கூடாது என்றனர்.
சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், தலைமை காவலர் ரேவதி ஆகியோரிடம் நீதிபதிகள் வாட்ஸ்அப் காலில் பேசி சில விபரங்களை பெற்றனர். பின்னர் வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.
சிபிசிஐடிக்கு நீதிபதிகள் பாராட்டு
நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதாக சிபிசிஐடிக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். இது தமிழக காவல்துறை மீது மக்களின் நம்பிக்கையை அதிகரித்திருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், தலைமை காவலர் ரேவதிக்கு பாதுகாப்பு வழங்கவும், குற்றவாளிகளை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.