

குடிக்கவே தண்ணீர் பற்றாக்குறை நிலவும் போது, எப்படி அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவது என, திருப்பூரில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் இன்று முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.
திருப்பூர் மாநகராட்சி 40, 41-வது வார்டுக்கு உட்பட்ட பாரதிநகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் 4, 5 மற்றும் பிரதான வீதிகளில், சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சி 3-ம் மண்டல அலுவலகத்தை இன்று (ஜூலை 2) முற்றுகையிட்டு, உதவி ஆணையர் சுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இது தொடர்பாக அப்பகுதியினர் கூறும்போது, "பாரதி நகர் 4, 5 மற்றும் மெயின் வீதிகளில் குடிநீர் விநியோகம் முறையாக இருப்பதில்லை. 12 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஆகவே உரிய ஆய்வு செய்து, வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கரோனா வைரஸ் தொற்று பரவும் காலம் என்பதால், சுய சுத்தம் என்பது அனைவரும் பேண வேண்டியுள்ளது. குடிக்கவே தண்ணீர் இல்லாதபோது, எப்படி கைகளை சோப்பு போட்டு கழுவ முடியும்?" என்றனர்.
மனுவை பெற்ற உதவி ஆணையர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.